செவ்வாய், 15 நவம்பர், 2016

காத்திருத்தால் அன்பு கூடும்!!



அலைகள் உரசும் கடலருகில்
  அமைதி யற்று அமர்ந்திருந்தேன்!
கலைகள் பேசும் கண்ணழகி!
  கவிதை பாடும் சொல்லழகி!
சிலைகள் தோற்கும் உடலழகி!
  சிந்தை முழுதும் பண்பழகி!
நிலையாய் மனத்தில் நின்றவளோ
  நேரம் கடந்தும் வரவில்லை!

பொன்னை நிகர்த்த சூரியனோ
  புதைந்து போனான் கடல்நடுவில்!
முன்னே தெரிந்த கடல்வானம்
  முகத்தில் கருமை பூசியது!
அன்பாய்க் காக்கச் சொன்னவளை
  அந்தோ ! இன்னும் காணவில்லை!
என்னே அவளின் அலட்சியமோ
  என்னை என்ன நினைத்துவிட்டாள்?

தணியாக் கோபம் மூண்டுவிட
  தாபம் நெஞ்சைத் தாக்கிவிட
இனியும் எனக்குப் பொறுமையின்றி
  எழுந்து போகக் கிளம்பிவிட்டேன்!
பனிபோல் எதிரில் ஓர்உருவம்!
  பார்வை குறுக்கிப் பார்த்தாலோ
தனிமைக் கொடுமை துயர்போக்க
  தனியே அவள்தான் வருகின்றாள்!

அவளைப் பார்த்த மறுநொடியே
  அடங்கா கோபம் ஓடியதேன்?
கவலை போக்கும் மருந்தாகக்
  காய்ந்த மனத்தில் நீராகக்
குவளைக் கண்ணைக் கண்டவுடன்
  கோடி இன்பம் கூடியதேன்?
இவளை நினைத்துக் காத்ததெல்லாம்
  இன்பம் மேலும் கூட்டிடவோ!!


பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 8 நவம்பர், 2016

ஆயிரம் ஐந்நூறு!






ஆசையுடன் கைநீண்ட ஆயிரம் ஐந்நூறும்
ஊசையாய்ப் போகா(து)! ஒளித்துவைத்தான்! – ஓசையின்றி
மோசமாய்ப் போனதே மோடியால்! கெட்டவர்கள்
வேசம் குலையும் விரைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.11.2016

செவ்வாய், 1 நவம்பர், 2016

தந்தைக்கு ஒரு தாலாட்டு!



பத்துமாதம் வயிற்றுக்குள்
   பத்தியமாய்ச் சுமக்கவில்லை!
சித்தத்தில் உன்நினைவைச்
   சிறிதேனும் இறக்கவில்லை!    
                                                  (பத்துமாதம்)

தாலாட்டிப் பாலூட்டிப்
   பார்த்திருந்தே இரசிப்பதில்லை!
ஆளாகி நீஉயர
   அறிவுருத்த மறப்பதில்லை!       
                                              (பத்துமாதம்)

உயிரிருந்தால் போதுமென்ற
   உணர்வுடனே இருப்பதில்லை!
உயிருக்குள் உனைவைத்த
   உள்ளுணர்வைச் சொல்வதில்லை!
                                               (பத்துமாதம்)
     
தந்தையிவர் எனக்காட்டும்
   தாய்மட்டும் உயர்வில்லை!
சிந்தையிலே சிறைவைத்த

   தந்தைக்கோ நிகரில்லை!
                                                 (பத்துமாதம்)


பாவலர் அருணா செல்வம்