திங்கள், 1 பிப்ரவரி, 2016

மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து ! - 2


    
     கல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் முதலாளியைப் பற்றியது தான் !
    ‘மரிக்கொழுந்து, நீ என்னை மதிச்சாலும் மதிக்கலைன்னாலும் பரவாயில்லை. ஆனா, நான் தெய்வமா மதிக்கிற சின்னைய்யாவையும் சின்னம்மாவையும் தான் நீ மதிக்கணும். அதமட்டும் ஒழுங்கா செஞ்சா நமக்குள்ளாற பிரட்சனையே வராது‘ என்றான் வேலு.
    அவனைப் பயத்துடன் பார்த்தாள் மரிக்கொழுந்து.
    ‘இன்னா பயப்படுற ?‘ என்று கேட்டுவிட்டு அவள் கையைப் பிடித்துத் தன் அருகே உட்கார வைத்தவன் தொடர்ந்து தன் சின்னய்யாவைப் பற்றியே தொடர்ந்து பேசினான்.
    மரிக்கொழுந்துவிற்கு பயம் போய் எரிச்சலாக வந்தது.
    ‘என்ன மனுஷன் இவர் ? மொதோ ராத்திரியில் பேச வேண்டிய பேச்சா இது… ? ஏதோ பேசலாம். தன் மொதலாளியைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு விட்டுவிட்டால் பரவாயில்லை. அதையே சொல்லி அறுத்தால் என்ன செய்வது… ?
    நடுஇரவு ஆகியும் அவன் சின்னய்யா பற்றிய பேச்சை நிறுத்தாததால்…
‘மாமா… எனக்கு தூக்கம் வருது‘ என்று சொல்லியபடியே கொட்டாவி விட்டாள்.
    அதன் பிறகு தான் சின்னய்யாவின் பேச்சைவிட்டு அவளைக் கவனிக்க ஆரம்பித்தான் வேலு.

    தன் பிறகு வந்த இரண்டு நாட்களிலும் அவன் தன் சின்னய்யாவைப் பற்றியே பேசினான். இன்றைய புதிய இன்பங்கள் உடம்பிலும் உள்ளத்திலும் நிறைந்திருக்கும் போது அடுத்தவரைப் பற்றிய பேச்சு அதிக இன்பத்தைத் தராது. அதனால் இவள் அதைக் காதில் வாங்கியவளாகத் தெரியவில்லை.
    மூன்றாம் நாள் தன் அப்பா கொடுத்த ஒரு புதுப்பாய், இரண்டு தலையணை, ஒரு டிரங்கு பெட்டியில் அவளுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு, அப்பாவிடம் கண்ணீர் மல்க விடைபெற்றுக் கொண்டு, கணவன் வீட்டுக்குச் செல்வதற்கு பேரூந்துக்காக காத்திருக்கும் போது தான் அந்த பயம் வந்தது.
    கணவனுக்கு ஏதும் குடும்பம் என்று எதுவும் கிடையாது. தனி ஆள். ஒரு வீட்டில் வேலை செய்கிறான் என்பது மட்டுமே மரிக்கொழுந்து அறிந்திருந்தாள்.
   ஆனால் அங்கே போனால் எங்கே தங்குவது ? இருக்க ஏதாவது இடம் உண்டா ? அவர் வேலை செய்கிற இடத்தின் முதலாளி எப்படிப்பட்டவராக இருப்பார்… ? நமக்கும் வேலை எதையாவது கொடுப்பாரா ? அந்த வீட்டு முதலாளி அம்மா எப்படிப்பட்டவங்க ? அவங்க எப்படி என்னிடத்தில் நடந்துக் கொள்வார்கள் ?
    இப்படிப்பட்ட பல கேள்விகள் முதன்முதலில் மனத்தில் தோன்றியது.
    பேரூந்தை விட்டு இறங்கி கயிற்றால் கட்டிய பாய் தலையணையைக் கையில்பிடித்துக் கொண்டு கணவனின் பின்னால் நடந்துச் சென்றவளின் மனது மெதுவாகப் படபடக்கத் துவங்கியது.
    பேரூந்தில் ஏறும் போது வந்த பயம் ஊர்வந்து இறங்கி நடக்கும் போதும் பின் தொடர்ந்து வந்தது.
    கணவன் தன் முதலாளியைப் பற்றி நல்லதாகவே சொல்லி இருந்தாலும் மனது அதை ஏற்க மறுத்தது.
    எத்தனை சினிமாவில் பார்த்திருக்கிறாள்… எத்தனை புத்தகத்தில் படித்திருக்கிறாள் ! முதலாளி என்றால், அதுவும் கிராமத்து முதலாளி என்றால் எப்படி இருப்பார்கள் என்பது தெரியாதா… ?
    பெரிய தொப்பை வைத்துக்கொண்டு, கத்தையாக மீசை வைத்துக்கொண்டு, கழுத்து மார்பு தெரிகிற மாதிரி சட்டை போட்டுக்கொண்டு… அதில் தங்கச் சங்கிலி தெரிகிற மாதிரி தானே இருப்பார்கள்…
    நம்ம கிராமத்து பண்ணையார் கூட இப்படி தானே இருந்தார். எப்போதும் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்துக்கொண்டு… !
    எப்போதோ அவள் கிராமத்துப் பண்ணையாரைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு யார் பண்ணையார் என்பதை அவள் அறிந்து வைத்திருக்கவில்லை.
    இருந்தாலும் பண்ணையார் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்ற எண்ணம் மனத்தில் நன்றாகப் பதிந்து விட்டது.
    பண்ணையார் எப்படி இருந்தால் என்ன ? நாம என்ன அவரிடமா வேலை செய்யப் போகிறோம் ?
    வேலு சொன்னது ஞாபத்திற்கு வந்தது.
    ‘சின்னம்மாவிற்கு நீ தான் ஒதவியா இருக்கனும். அவங்களுக்கு ஒத்தாசைக்கி ஆளில்லைன்னு சொன்ன பெறகு தான் நான் ஒன்ன கட்டிக்கிட்டேன்‘ என்றான்.
    அதனால பண்ணையார் எப்படி இருந்தா நமக்கென்ன ? நமக்குத் தேவை மொதலாளி அம்மா தான்…
    சரி…. அவங்க எப்படி இருப்பாங்க… ?
    அதே மாதிரி …. சினிமாவுல வார்ற மாதிரி… கொசுவத்த பின்னால வச்சி சேல கட்டிக்கினு…. சைடா கொண்டை போட்டு, அத சுத்தி நிறைய பூ வச்சிக்கினு… நிறைய நகை போட்டுக்கினு… வாய் நிறைய வெத்தலையைப் போட்டு கொதப்பிக்கினு தானே இருப்பாங்க.
    அவங்க முகம் எப்படி இருக்கும்… ? முகம் எப்படி இருந்தால் என்ன ? குணம் எப்படி இருக்கும் ?
    தான் வேலை செய்த வீட்டின் முதலாளி அம்மா நினைப்பு வந்தது மரிக்கொழுந்துவிற்கு.
    அவங்க சந்தோசமாக  இருக்கும் போது சந்தோசமாக நடத்துவார்கள். கோபமாக இருந்தால் அதிகாரமாக வேலை வாங்குவார்கள். ஆக மொத்தம் எந்த வேலையையும் செய்யாமல் விட மாட்டார்கள்.
     எல்லா வேலையையும் செய்து முடித்தால் தானே மாலையில் ஒன்னரை மணிநேரம் தொலைக்காட்சி பார்க்க விடுவார்கள்.
    அதே மாதிரி இந்த மொதலாளி அம்மாவிற்கும் கொணம் இருந்தால் கூட போதும். எப்போதும் அவங்க திட்டினாலும் எப்போதாவது அன்பாக பேசுவார்கள்.
    அன்புக்கு ஏங்கும் இதயங்களுக்கு மிகக் கொஞ்சமான அன்பு கிடைத்தாலும் அதை நினைத்தே ஆயுலைக் கடத்தி விடுவார்கள். என்ன செய்வது…. ?
    இவையெல்லாவற்றையும் நினைத்துக்கொண்டே வேலு நுழைந்த கோவிலுக்குள் நுழைந்தாள் மரிக்கொழுந்து.
    அம்மனை அன்று அழகாக அலங்கரித்து இருந்தார்கள்.
    வேலு அவள் அருகில் வந்து சொன்னான்.
    ‘மரிக்கொழுந்து…. இது தான் நம்ம ஊர் எல்லை காத்தாள் கோயிலு. சக்தி வாய்ந்த அம்மன். நல்லா வேண்டிக்கோ….‘ என்று சொல்லிவிட்டு, திரும்பி சாமியைப் பார்த்து, ‘‘ஆத்தா…. என்  சின்னய்யாவ நல்லபடியா வை ஆத்தா….‘‘ என்று வாய்விட்டு கும்பிட்டு தரையில் விழுந்து கும்பிட்டான்.
    அதைக் கேட்டதும் மரிக்கொழுந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. கல்யாணமாகி முதன்முதலில் மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான்… அம்மனிடம் தனக்கென எதுவும் கேட்காமல், வேண்டுதலும் தன் சின்னய்யாவுக்கா….. ?!
    அப்படி ஒரு விசுவாசமா…. ?
    இல்லையென்றால் குருட்டுத்தனமான பாசமா… ?
    அம்மன் மடியில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியிலும் மாங்கல்யத்திலும் வைத்துக்கொண்டாள்.
    அதற்குள் பெட்டியைத் துாக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் வேலு. பேசாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.
    திரும்பவும் பழைய கேள்விகளே மனத்தில் வந்து குழப்பின.
    எந்த கேள்விகளுக்கும் சரியான பதிலோ, சமாதானமாகக் கூடிய பதிலோ கிடைக்காத வரையில் அந்தக்கேள்விகள்  திரும்பத் திரும்ப மனத்தில் சுற்றிச் சுற்றி வந்து நம்மை கேட்டுக் கொண்டே தான் இருக்கும்.
    மரிக்கொழுந்தின் மனத்திலும் இந்தக் கேள்விகள் வந்து அழுத்திக் கொண்டே தான் இருந்தது. பதில் தெரிய வேண்டும்.
    பதில் தெரிந்துக் கொள்ளும் ஆசையில் முன்னால் விறுவிறுவென்று நடந்துச் சென்றுகொண்டிருந்த வேலுவின் முன்னால் ஓடிவந்து நின்று கேட்டாள்….
    ‘மாமா, சின்னம்மா பாக்கறதுக்கு எப்படி இருப்பாங்க…. ?‘ சற்று மூச்சு வாங்கினாள்.
    அவன், நின்று நிதானமாக அவளைப் பார்த்துவிட்டு,
    ‘‘இப்போ கோயில்ல பாத்தியே அம்மன். அந்த அம்மனைப் போலதான் சின்னம்மாவும் இருப்பாங்க.‘‘
    சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு நடந்தான்.
    அப்போது வேலு சொன்னது பிரமிப்பாக இருந்தாலும் திலகவதியை முதன்முதலில் பார்க்கும் பொழுது அவன் சொன்னது சற்றுக் குறைச்சலாகவே பட்டது மரிக்கொழுந்துவிற்கு.

(தொடரும்)

    

2 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கதை மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் தருகிறது.

//பேருந்தை விட்டு இறங்கி கயிற்றால் கட்டிய பாய் தலையணையைக் கையில்பிடித்துக் கொண்டு கணவனின் பின்னால் நடந்துச் சென்றவளின் மனது மெதுவாகப் படபடக்கத் துவங்கியது.//

’தொடரும்’ போட்ட இடத்தில் எங்களுக்கும் மனதில் இதே படபடப்பு நீடிக்கிறது. :)

மரிக்கொழுந்தின் பெயர் போலவே அவள் வாழ்விலும் நல்ல மணம் வீசப் பிரார்த்தனைகள்.

balaamagi சொன்னது…

நல்லா போகுது கதை,,, தொடர்கிறேன்.