மாலை வேலை முடித்துவிட்டு ஐந்தரை
மணியளவில் பேருந்துக்காகக் காத்திருந்த சங்கீதாவிற்கு வெய்யிலின் அனலால் ஏற்பட்ட
கசகசப்பு எரிச்சலைத் தந்தது.
அன்று முழுவதும் நெருப்பை அள்ளி
வீசிய சூரியன் ஓரளவிற்கு இறங்கிவிட்டாலும் அனலை வாரிவிட்டே சென்றிருந்தது.
கழுத்தில் ஏற்பட்ட கசகசப்பைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தவளை நோக்கி
அந்த சிறுமி நான்காக மடித்த ஒரு காகிதத்தை நீட்டினாள்.
“என்னம்மா இது...?“ சிறுமியிடம்
கேட்டாள்.
“தெரியாதுக்கா.... அந்த அண்ணன் தான் இதை உங்ககிட்ட
கொடுக்கச் சொன்னார்“ என்றாள்.
அவள் கைநீட்டிய திசையில்
பார்த்தாள். இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க வாலிபன். சற்று மிடுக்கான தோற்றம்.
அவனுடைய குளிர் கண்ணாடியும், அவன் அமர்ந்திருந்த பைக்கும் அவனின் அழகை அதிகப்படுத்திக்
காட்டின.
“இந்தாங்கக்கா...“
சிறுமிக்கு என்ன அவசரமோ....!!
பக்கத்தில் பேருந்துக்காக அவளுடன்
காத்திருந்த சிலர் அவளை ஒரு மாதிரியாகப் பார்ப்பது தெரிந்தது. சட்டென்று
சிறுமியிடம் குனிந்து,
“இந்தாம்மா... இதை அவரே வந்து என்னிடம்
கொடுக்கச் சொல்லு“ என்றாள்.
சிறுமி அங்கிருந்து நகர்ந்ததும்
அவள் போக வேண்டிய பேருந்து வந்துவிட அங்கிருந்த அனைவரும் ஏறினார்கள் சங்கீதாவைத்
தவிர.
பேருந்து கிளம்பும் போது அங்கிருந்து
கடைசியாக ஏறிய மூதாட்டியின் சொற்கள் காதில் விழுந்தது.
”பாத்தா நல்ல பொண்ணு
மாதிரி தெரியுது. மனசைக் கட்டுப்படுத்தினா நல்லா இருக்கும்”
பேருந்து போய் விட்டது.
எதிரில் இருந்த அவன், தன் வண்டியை
நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து அவள் இருக்கும் இடத்தை நோக்கி வருவது தெரிந்தது.
நடையில் ஒருவித உற்சாகம். அவளை மயக்கிவிட்டோம் என்ற நினைப்பா? அல்லது அவள்
திட்டினாலும், ஓர் அறை கொடுத்து காரித் துப்பினாலும் பார்ப்பதற்கு அங்கே யாரும்
இல்லை என்ற தைரியமா? அவளுக்குத் தெரியவில்லை.
அருகில் வந்தவன் சிநேகிதமாகப்
புன்னகைத்தான். அவள் சிரிக்கவில்லை. மாறாக முகத்தைக் கடுகடுப்பாக மாற்றிக் கொண்டு
கேட்டாள்.
“என்ன அது லட்டர்?“
“நீங்களே படிச்சிப் பாருங்களேன்“
கடிதத்தை நீட்டினான்.
“அது தான் எழுதின நீங்களே
இருக்கிறீங்களே. என்ன எழுதி இருக்கிறீங்கன்னு சொல்லுங்க.“ என்றாள்.
“அது வந்து....“ சொல்லத்
தயங்கினான்.
“லவ் லட்டரா...?“ அவளே கேட்டாள்.
அவன் சற்று நேரம் கழித்து ”ஆமாம்” என்பதற்கு அறிகுறியாகத்
தலையாட்டினான். அவன் முகத்தில் தெரிந்த சாயல் தான் அசடு வழிதல் என்பதா...!!!
“நீங்கள்
என்னைக் காதலிக்கிறீங்களா?“ கேட்டாள்.
இதற்கும்
தலை அசைப்பு தான்.
“சரி.
காதலிச்சிக்கோங்க! அதுக்கு ஏன் லட்டர்?“
இந்தப்
பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை போலும். இனிமேல் பேசாமல் இருந்தால் நல்லதில்லை
என்று நினைத்தானோ என்னவோ...
“என்ன
இப்படி சொல்லிட்டிங்க? காதல் என்றால் இரண்டு பேரும் மனம்விட்டு பேச வேண்டாமா?“
“எதைப்பற்றி பேசனும்...?“
“எல்லாத்தையும் பத்தி தான். நம் எதிர்காலத்தைப் பற்றிப் பேச எவ்வளவோ
இருக்குது“
“எதிர்காலத்தைப் பற்றித் தானே..... எனக்கு இப்பவே உங்களைக் காதலித்தால்
எதிர்காலத்தில் ஏற்படும் முடிவு தெரிகிறதே...“ என்றாள் அலட்சியமாக.
“என்ன
தெரிஞ்சிக்கினீங்க?“
“ஒரு
கடிதத்தைக் கொடுக்கவே தயங்கி இன்னொருவருடைய உதவியை நாடுகிற நீங்கள் கடைசி
வரைக்கும் எப்படி உறுதியாய் இருப்பீங்க? அது மட்டுமல்லை. காதல்ன்னு சொல்லிவிட்டு
என்னை பார்க், பீச், சினிமான்னு கூப்பிடுவீங்க. நானும் உங்களுக்காக வருவேன். ஒரு
நாளைக்கு அப்பா அம்மாவுக்குத் தெரியும். உங்கள் வீட்டுல வசதி குறைவான என்னைப்
பெண்கேட்க சம்மதிக்க மாட்டாங்க. அப்படியே சம்மதிச்சாலும் ஒரு நாள் வந்து
பார்த்துட்டு என் அப்பா போடுற பத்து பவுன் நகை பத்தாதுன்னு சொல்லிட்டு போவாங்க.
நான் ஒருவனை காதலிச்சேன் என்பதற்காக வேற யாரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன் வர
மாட்டாங்க. என்னால என் ரெண்டு தங்கையோட வாழ்க்கையும் பாழாகும். இதெல்லாம் எனக்கு
அவசியம் தானா?“
அழுத்தம்
திருத்தமாகச் சொன்னவளை அமைதியாகப் பார்த்தான். அவள் சொன்னதில் உண்மை இருந்தது. வசதியான
வீட்டில் பிறந்து கைநிறைய சம்பாதிக்கும் அவனுக்கு வசதியான வரன்கள் வரிசையில்
இருந்தது உண்மை தான். ஆனால் அவனுக்குப் பிடித்ததென்னவோ அழகும் அடக்கமும் நிறைந்த
இந்த சங்கீதாவைத் தான். இந்த சங்கீதா அவனுடைய இதயக் கோவிலில் தெய்வமாக
அமர்ந்துவிட்டாள். அவளை விட மனமில்லாமல் கேட்டான்.
“அப்படின்னா என்னை நீ காதலிக்க மாட்டியா? உன்னை நான் நிச்சயமா கைவிட
மாட்டேன். இது சத்தியம்“ குரலில் கெஞ்சளின் சாயலும் அதே சமயம் சற்று உறுதியும்
இருந்தது.
அவனுடைய உறுதியைப்
பார்த்துவிட்டு சொன்னாள்.
“சரி
காதலிக்கிறேன். ஆனால் இப்போ இல்லை. உங்க அம்மா அப்பா சம்மதத்தோட என்னைப் பெண் கேட்டு,
என் அப்பா போடுற பத்துப் பவுனை ஏத்துக்கினு எனக்குத் தாலி காட்டுறீங்க பாருங்க...
அந்த நொடியிலிருந்து உங்களை நான் காதலிப்பேன். அது வரையி நீங்கள் யாரோ. நான் யாரோ
தான். உங்களை மட்டுமில்லை. வேற யாரையுமே காதலிக்க மாட்டேன்.“
அவள்
சொல்லி முடிக்கவும் அவள் செல்லும் பேருந்து வரவும் சரியாக இருக்க அவள் அதில் ஏறி
கிளம்பி விட்டாள். அவளைச் சுமர்ந்து சென்ற வண்டி கண்ணிலிருந்து மறைந்தாலும் அவள்
சொன்ன சொற்கள் அவனின் காதினுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அவனின்
காதலை அவள் மறுக்கவில்லை. அதே சமயம் அவள் ஏற்கவும் இல்லை. காத்திருக்கச்
சொல்லியிருக்கிறாள். அடுத்தவருக்குத் தெரியாமல் பயந்து பயந்து காதலிக்க வேண்டாம்.
சுதந்திரமாகவும் உரிமையுடனும் காதலிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.
அவனுக்கு
அவள் மேலிருந்த அன்பு காதல் மேலும் அதிகமாகியது.
காத்திருப்பேன்.... இவளது காதல் கிடைக்கும் வரையில் விடாமல்
காத்திருப்பேன்... என்ற உறுதியை மனத்தில் எடுத்ததும் மனநிறைவுடன் வீடு நோக்கிச்
சென்றான்.
அருணா செல்வம்
01.04.1998
(இந்தக் கதை எந்த இதழில் வெளிவந்தது என்ற ஞாபகம்
இல்லை)