திங்கள், 30 ஜூன், 2014

புதுமைப்பெண்!!



அவை வணக்கம்!

தங்கத் தமிழைப் படைத்திட்ட
    தமிழின் தலைவா முதல் வணக்கம்!
எங்கும் நிறைந்து கமழ்கின்ற
    எழிலே தமிழே என்வணக்கம்!
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
   சான்றோர் தமக்கும் தலைவிக்கும்
அங்கம் சிலிர்க்கத் தமிழ்கேட்கும்
   அவைக்கும் என்தன் நல்வணக்கம்!!

புதுமைப்பெண்!

தலைமுறைகள் பற்பலவும் கடந்தா யிற்று!
    தன்னிசையாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை!
சிலமுறைகள் கொஞ்சமேனும் மாறி வந்தும்
    சிலர்மட்டும் பெறமுடிந்த அளவே உண்டு!
பலமுறைகள் முயன்றுபார்த்தும் தோல்வி கண்டே
    பழங்கால பாழ்கிணற்றில் நீந்து கின்றோம்!
அலைமுறையில் வந்துபோகும் உரிமை யைநாம்
    அடக்கிவைத்தல் என்பதுதான் புதுமை அன்றோ!

போராட்டம் என்பதுதான் வாழ்க்கை என்றால்
    புதுமுறையில் போராடி வெற்றி காண்போம்!
சீரோடும் சிறப்போடும் வாழ்வ தற்கு
    சிரிப்பொன்றை ஆயுதமாய் முகத்தில் கொள்வோம்!
நீரோடும் இடத்தில்வேர் ஓடும்! அன்பு
    நீங்காத இடத்தினிலே பகைமை ஓடும்!
கூரான வாள்கொண்டால் பயனோ இல்லை!
    குளிர்தமிழில் இவ்வாறாய்ச் சொல்தல் நன்றே!

இதுதானே பண்பாடு என்று நம்பி
    இருந்திருந்தே பெண்களெல்லாம் அடிமை யானார்!
அதுவல்ல பெண்ணினத்தில் உரிமை காக்க
    ஆண்களிதைக் கையாண்டே அடக்கி விட்டார்!
முதுகவிகள் மூதாதை சொன்ன தெல்லாம்
    முதல்தெய்வம் என்றுபெண்ணை நினைத்த தாலே!
மதுகவியில் சொன்னதெல்லாம் உண்மை! உண்மை!
    மாறிவிட்ட நிலையிலதில் இல்லை நன்மை!

கற்களிலே உள்ளிருக்கும் சிலையைப் பார்க்கக்
    காலமெல்லாம் காத்திருக்கும் மூடன் போல
முற்களின்மேல் வாழ்க்கையென்றே கவலைப் பட்டு
    முயற்சியின்றிப் பயந்துநின்றே வீணாய்ப் போனோம்!
சொற்களிலே அன்புபூச மயங்கும் வார்த்தை!
    சூடேற்றி அச்சொல்லை உரக்கச் சொல்லு!
தற்காலப் பெண்ணென்போர் தாழ்வாய் இல்லை
    தரணிபோற்ற பிறந்ததைநீ தெளிவாய்ச் சொல்லு!

பெண்ணென்றால் பூப்போன்ற உள்ளம் என்று
    பொதுப்படையாய்ப் பெரியோர்கள் சொல்லி வைத்தார்!
மண்ணென்ற பூமிதனில் பிறந்த பூவோ
    மல்லிகையாய்ப் பிறந்தவிட்டால் ஒருநாள் வாழ்வே!
உண்ணென்று உவந்தளிக்கும் கனிகள் எல்லாம்
    ஒருபூவில் பூத்துவந்த உயர்வைக் கண்டால்
கண்காணும் அழகையவர் சொல்ல வில்லை!
    கனிக்குள்ளே விதைக்கண்ட கருவைச் சொன்னார்!

சூழ்ச்சிகளில் நமைவீழ்த்தும் சதியை எல்லாம்
    சுயமாகச் சிந்தித்தே அதனை வெல்வோம்!
வீழ்ச்சிஎன வீழ்ந்தாலும் அருவி நீராய்
    வீறுகொண்டே எழுந்தொடி நன்மை செய்வோம்!
தாழ்த்திநம்மை பேசுகின்ற கயவர் கண்டால்
    தடைகள்ளாய் அதைநினைத்துத் தாண்டிச் செல்வோம்!
ஆழ்த்துகின்ற மனக்கவலை யாருக் கில்லை
    அதைக்கூட அடிமையாக்கி புதுமைக் காண்போம்!

 உதித்தெழுந்த சூரியனும் உதிப்பான் மீண்டும்!
    உனக்குள்ளே இருப்பவனோ உறங்கு கின்றான்!
மதிதிறந்து அவனைநீ விழிக்கச் செய்தால்
    மனப்பேயின் பயமெல்லாம் ஓடிப் போகும்!
சதிசெய்த சாத்திரத்தை நகர்த்தி வைப்போம்!
    சாதிக்கப் பிறந்துவளாய் நிமிர்ந்து நிற்போம்!
பொதியல்ல நாம்வாழும் வாழ்க்கை! பெண்ணே
    புதிதாகச் சிந்தித்தால் புதுமை பூக்கும்!


(26.06.2014 அன்று பிரான்ஸ் கம்பன் கழகம் நடத்திய “மகளிர் விழா“ வில் வாசித்தக் கவிதை)

அருணா செல்வம்

25.06.2014

வெள்ளி, 27 ஜூன், 2014

ஏன் இந்த ஆண்களெல்லாம் இப்படி இருக்கிறார்கள்?



    மதுரைத் தமிழன் அவர்கள் தொடர் பதிவு எழுதச் சொல்லி தொடங்கியதில் இருந்து நிறைய பதிவர்கள் தங்களின் மனதில் பட்டதைப் பதிவாக போட்டு அசத்தி இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்தது தான்.

   ஆனால்.....
   மூன்றாவது கேள்விக்கும் ஒன்பதாவது கேள்விக்கும் ஒரு சில ஆண்கள் கொடுத்திருக்கும் பதில் இருக்கிறதே..... மதுரைத் தமிழன், பகவான் ஜி, பால கணேஷ் ஐயா, ரஹிம் கஸாலி..... இன்னும் ஒரு சிலர் பெயர்களை மறந்து விட்டேன்.
   இவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணியதால் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது. எங்களுக்காவது பரவாயில்லை.
   பதிவுகளைப் படிக்கும் திருமணமாகாத இளஞர்கள்... சீனு, ஹாரி, அரசன், அ. பாண்டியன் போன்றோர்கள் உங்களின் பதில்களில் பயந்து விட மாட்டார்களா....?))) ஏங்க சின்ன பிள்ளைகளை இப்படி பயமுறுத்துகிறீர்கள்...?

   பாவேர்தர் பாரதிதாசனின் “குடும்பவிளக்கில்“ ஒரு முதுமைக் காதல் பாடல்

புதுமலர் அல்ல! காய்ந்த
   புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லாள்
   தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
   வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக்(கு) இன்பம் நல்கும்?
   “இருக்கின்றாள்“ என்ப தொன்றே!

இப்படி அல்லவோ ஒவ்வோர் கணவனும் தன் மனைவியை நினைக்க வேண்டும்.

சரி இதை விடுங்கள்.

   ஆண்களுக்குச் சிரிக்கவே தெரியாதா....? அல்லது வராதா....? கல்யாணத்திலிருந்தே ஏதோ பறிகொடுத்த மாதிரியே முகத்தை சீரியஸாகவே வைத்துக்கொண்டு இருந்தால் எந்த பொண்ணுக்குத் தான் கோபம் வராது? இதைக் கொஞ்சமாவது மாற்றிக்கொள்ளுங்கள் ஆண்களே.
   சிரிக்க பழகுங்கள். ஆழ்ந்த சிரிப்பில் கூட ஏதோ ஒரு சிறு வலி இருந்துகொண்டே தான் இருக்கும். இருந்தாலும் மற்றவர்களுக்காவது சிரிக்க பழகுங்கள்.
   என்னடா இது அருணா அட்வைஸ் எல்லாம் பண்ணுதே என்று எண்ணிவிட வேண்டாம்.
   அருணா சொன்னால் மட்டும் சிரிப்பு வந்து விடுமா என்றும் நினைக்க தோன்றுகிறதா...?
   பேசாமல் இந்த ஜோக்கைப் படித்துப் பாருங்கள். ஜோக் புரிந்தால் உங்களுக்குத் தானாக சிரிப்பு வரும்.
   ஒரு தபால் ஆபிஸில் ஒருவர் எதையோ எழுத நினைத்துத் தன் பேனாவை எடுத்து எழுதிய போது அது சரியாக எழுதவில்லை. முள் உடைந்து விட்டதா... அல்லது பேனாவில் மை இல்லையா என்பது தெரியாமல் அதை உதறி உதறி எழுத முயற்சித்துக் கொண்டு இருந்தார்.
   அந்த நேரத்தில் ஒருவர் ஏதோ ஒரு பாரத்தில் கையெழுத்திட பேனா இல்லாததால் இவரிடம் வந்து, “ஐயா... கொஞ்சம் பேனா தர்றீங்களா...?“ என்று கேட்டார்.
   ஏற்கனவே எரிச்சலுடன் இருந்தவர் திரும்பி அவரைப் பார்த்து, “ம்ம்ம்.... இப்போ ஸ்டாக் இல்லை. காலையில வா. கொஞ்சமென்ன... எல்லாத்தையும் நீயே எடுத்துக் கொண்டு போ“ என்றார்.
   வந்தவர் எதுவும் விளங்காமல் “ஙே“ என்று விழித்தபடி சென்றார்.

   என்ன நண்பர்களே சிரித்தீர்களா....? சிரிப்பு வரவில்லை என்றால் என் தவறு இல்லை.

சிரியுங்கள். சிரியுங்கள். சிரித்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.


இந்தப் பதிவு யார் மனத்தையும் புண்படுத்த நினைத்து எழுதியது இல்லை.

புதன், 25 ஜூன், 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால்.....




நட்புறவுகளுக்கு வணக்கம்.

   நம் மதுரைத் தமிழன் இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? என்ற தலைப்பில் தொடர் பதிவிட என்னையும் அழைத்துள்ளார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. தொடர்ந்து சாமானியன் அவர்களும் அழைப்பு விடுத்துள்ளார். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
    நம்மின் சுயத்தை நாமே மறந்துவிட்ட நிலையில் நம்மைப் பற்றி நாமே அறிந்துக்கொள்ள இந்தத் தொடர் பதிவின் கேள்விகள் உதவியாக இருக்கிறது என்பது உண்மை. நன்றி மதுரைத் தமிழன்.
   சீரியசாக எழுத வேண்டுமாம்.
   அதற்காக நான் பதில் எழுதும் முன் என் கணவரின் முகத்தை மனக்கண்ணில் நிறுத்தி வைத்தால் பதில் சீரியசாக வரும் என்று மதுரைத் தமிழன் சொன்னதால் உண்மையில் அதன் படியே எழுதியுள்ளேன்.

1.உங்களுடைய 100வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

    என்னை மறக்காமல், என்னை நினைத்துப் பார்த்து, என் 100வது பிறந்த நாளில் என் பெயரைச் சொல்லி மற்றவர்கள் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளை அறியும் ஆற்றலைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

3. கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது? எதற்காக?

    இப்பொழுது தான்.
    காரணம்.... நமது மதுரைத் தமிழன் அடிவாங்கி அடிவாங்கியே சிரிப்பைத் தொலைத்து விட்டார் போலும். அதனால் தான் “கடைசியாக“ என்று எழுதியிருக்கிரார். பாவம் தான் அவர்“ என்று அவரை நினைத்துச் சிரித்தேன்.

4. 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன?

    “பவர் கட்“ என்றால் கரெண்ட் கட்டாவதைத் தானே சொல்கிறீர்கள்....?))
    இங்கே குளிர்காலமாக இருந்தால் போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு எடிசனைத் திட்டிக்கொண்டே சோபாவில் சுருண்டு விடுவேன்.
    கோடைகாலமாக இருந்தால் என் கணவருடன் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சேன் நதியோரத்திற்கச் சென்று விடுவேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

    ஆண் பிள்ளையிடம் விட்டுக்கொடுத்து அன்பாய் வாழவேண்டும் என்றும்,
    பெண்பிள்ளையிடம் விட்டுக் கொடுக்கிறேன் என்று அடிமையாகி விடாதீர்கள் என்றும் சொல்வேன்.

6. உலகில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புகிறீர்கள்?

    உலகில் என்றால் எவ்வளவோ பிரட்சனைகள் உள்ளது. அதில் ஒன்றே ஒன்றை மட்டும் உடனடியாக தீர்க்க முடியும் என்றால் இலங்கை பிரட்சனையை உடனடியாகத் தீர்ப்பேன்.

7. உங்களுக்கு ஒரு பிரட்சனை. அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்?

    யாரிடம் கேட்டாலும் பிரட்சனை பெரியதாகுமே தவிர குறையாது. அதனால் எனக்கு நானே சுயஆய்வு செய்து பார்ப்பேன். இருப்பினும் முடிவு தெரியவில்லை என்றால் காலத்தின் கையில் விட்டுவிடுவேன்.

8. உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

    அவர் என்னைப் பற்றி ஏதும் “அறியாதவர்“ என்று மன்னித்து சும்மா விட்டுவிடுவேன்.

9. உங்களின் நண்பரின் மனைவி இறந்து விட்டால் என்ன சொல்வீர்கள்?

    ஆறுதல் சொல்ல வார்த்தை தெரியாததால் (இல்லாததால்) நானும் அவருடன் சேர்ந்து அழுதுவிட்டு வருவேன்.

10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

    தோழிகளுக்குப் போன் செய்து அரட்டை அடித்து (வெட்டியாக) பொழுதைப் போக்குவேன்.

    அனேகமாக நீங்கள் அனைவரும் எழுதிவிட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நான் தொடர் பதிவிட யாரையும் அழைக்க முடியவில்லை. இருப்பினும் இன்னும் யார் யாரெல்லாம் எழுதவில்லையோ அவர்கள் அனைவரையும் என் சார்பாகத் தொடர் பதிவிட அழைக்கிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

25.06.2014

வெள்ளி, 20 ஜூன், 2014

சத்திரத்துச் சாப்பாடு – இரண்டாம் விளக்கம்(2)





நட்பறவுகளுக்கு வணக்கம்.
    காளமேகப் புலவரின் சத்திரத்துச் சாப்பாட்டு என்ற தலைப்பில் எழுதிய பாடலுக்கான இரண்டாம் விளக்கத்தை ஒரு பதிவாக இட்டேன்.
   அது தவறான பதில் என்று ஒருவர் (பெயரில்லாதவர்(?) கருத்துத் தெரிவித்திருந்தார். நானும், நாம் சொன்ன விளக்கம் உண்மையில் தவறானதாக இருந்தால் அதையே மற்றவர்கள் எடுத்துக் கொள்ள நேரிடுமே என்ற காரணத்தால் உடனே அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்.
   பிறகு காளமேகத்தின் தனிபாடல்கள் தொகுதிகளை எடுத்துப் பார்த்தேன். அதிலும் “பாடலின் பொருளை மாற்றி உரைத்தார்“ என்றே இருந்தது. அதனுடன் சேர்ந்தது போல வேறு பாடலும் இல்லை.
   கடைசியில் பெயரில்லாத ஒருவரின் கருத்திற்காக நாம் அதிகமாக சிந்தித்துத் தேட வேண்டிதில்லை என்று முடிவெடுத்து இந்த இடுகையை வெளியிடுகிறேன்.

   காளமேகம் ஒரு பாடலுக்கு இரண்டு பொருள் வருமாறு சிலேடையாகப் பல பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் அப்பாடல்கள் ஆழ்ந்து பொருள் கொள்ளவேண்டும். புரிந்து படித்தால் “ஆஹா... அருமை“ என்று எவராளும் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்தச் சத்திரத்துப் பாடலில் இரண்டாவது கருத்துச் சிலேடையாக இல்லாமல் மிகவும் சாதாரணமாகப் பொருள் கொள்வது போல் தான் இருக்கிறது.


பாடல்

கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

    இந்தப் பாடலின் முதல் விளக்கம்... ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஓர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும். என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
   இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன் செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடம் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான் அல்லவா?
   அப்போது, கவி காளமேகம், அவனுடைய மனமாற்றத்தைப் புரிந்து கொண்டு,
   ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலே அரிசி வரும். அந்த அரிசியை இரவெல்லாம் தீட்டி, ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிய நேரத்திலேயே உலையிலே இடுவார்கள். காலையில் விடிவெள்ளி வானத்தில் எழும்பொழுதே இரவலர்களின் அகம் இருக்கும் பையிக்கு அன்னம் இடுவார்கள். என்று பொருளினை மாற்றி உரைத்து அவன் மனம் மகிழுமாறு செய்தார்.
   அதாவது அந்தச் சத்திரத்தில் இரவெல்லாம் உழைத்து விடிகாலையிலேயே உணவு இடுகிறார்கள்.
   இது தான் அந்தப் பாடலின் இரண்டாவது பொருள்.

   இதைவிட அவரின் “பாம்புக்கும் எள்ளுக்கும்“ உள்ள ஒற்றுமை “தென்னைமரத்திற்கும் வேசிக்கும்“ உள்ள ஒற்றுமை போன்ற பாடல்களில் உள்ள கருத்துக்கள் மிகவும் சுவையாக இருக்கும். பின்னாளில் அதையும் எழுதுகிறேன்.

மற்றபடி ஏற்கனவே படித்த, படிக்க வந்து ஏமார்ந்தவர்கள் அனைவரிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்.

நன்றி.
அருணா செல்வம்.


பாடலக்கான வேறு விளக்கம் யாருக்காவது தெரிந்து இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அல்லது அதற்கான வேறு பாடல் இருந்தாலும் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

செவ்வாய், 17 ஜூன், 2014

வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்குழந்தை உள்ள பெற்றோரா? படியுங்கள்.



நட்புறவுகளுக்கு வணக்கம்.

    உங்கள் வீடுகளில் அல்லது தெரிந்தவர் வீடுகளில் வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்கள் இருக்கிறார்களா...? இந்தப் பதிவைப் படியுங்கள்.
   என் தோழி இளம் மருத்துவர். அவள் கடந்த சில மாத காலமாக குழந்தைகள் பிரசவிக்கும் பிரிவில் பணி செய்கிறாள். அவள் சொன்னதை உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.
   அவள் அங்கே இருந்த நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு பத்து குழந்தைகள் பிறந்தால் அதில் நான்கு குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகளாகவும் இரண்டு குழந்தைகள் குறைமாத குழந்தையாகவும் தான் பிறக்கின்றனவாம்.
    அவள், “பொதுவாக மருத்துவர்கள் 25 வாரத்திற்கு மேல் தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தைகளுக்குத் தங்களால் முடிந்த அளவிற்கு மருத்துவம் செய்து காப்பாற்றுவார்கள்.
   25 வாரத்திற்குள் குழந்தை வெளியாகிவிட்டால் அந்த குழந்தைக்கு எந்த மருத்துவமும் பார்க்காமல் உரியவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து விடுவார்கள். பொதுவாக 25 வாரத்திற்குள் பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். அப்படியே காப்பாற்றினாலும் அக்குழந்தைகள் ஊனமுள்ள குழந்தையாகத்தான் இருக்குமாம்.
   தவிர போன வாரத்தில் நீண்ட காலமாக குழந்தையில்லாத பெண்ணுக்கு ஐந்தாவது மாதத்திலேயே குழந்தைப் பிறந்துவிட்டது. அந்தப் பெண் அழுது கேட்டுக்கொண்டற்கு இணங்க, மருத்துவர்கள் அக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சித்து இருக்கிறார்கள். பிறந்த போதே குழந்தை மூச்சிவிட சிரமப்பட்டதால் அந்த 900 கிராமே உள்ள குழந்தைக்கு ஆக்ஸிஜன் குழாய்கள் இணைத்து மூன்று நாட்கள் வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதன் துடிப்பு மெல்ல மெல்ல அடங்க அந்தப் பெண்ணிடம், “இனி எங்களால் காப்பாற்ற முடியாது“ என்று சொல்லவும் அந்த பெண் “என் குழந்தையை என்னிடமே கொடுத்துவிடுங்கள். நான் காப்பாற்றிக் கொள்கிறேன்“ என்று அழுதாள்.
   மருத்துவர், “உங்களின் குழந்தைக்குப் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் குழாயை எடுத்ததும் இறந்து விடும். ஆனால் வேறு வழியில்லாமல் நாங்கள் அதை எடுக்கத் தான் வேண்டியுள்ளது“ என்று சொல்லவும், அந்தப் பெண் “என் எதிரிலேயே எடுங்கள்“ என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்றிருந்தாள்.
   ஆக்ஸிஜன் குழாயை எடுத்ததும் அந்தக் குழந்தை இரண்டு நிமிடத்திலேயே இறந்து விட்டது. பாவம் அந்தப் பெண் கதறி அழதாள்“ என்று என் தோழி சொன்னாள்.
   எனக்கும் கவலையாக இருந்தது. இருந்தாலும் நான், “நீண்ட காலமாக குழந்தையில்லாத பெண்ணுக்கு ஏன் ஐந்தாவது மாதத்திலேயே குழந்தைப் பிறந்தது.?“ என்று கேட்டேன்.
   “அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே கருப்பை வலுவில்லாமல் இருந்தது. அவளுடைய டாக்டர் அதிக வேலைகள் செய்யாமல், வெயிட்டான பொருட்கள் எதையும் தூக்காமல் முடிந்தவரையில் ரெஸ்ட்டிலேயே இருக்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் எப்படி இருந்தாளோ.... இப்படி ஆகி விட்டது. தவிர இப்போது இருக்கும் பெண்களுக்கு முதல் முறையிலேயே கரு தங்குவது இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வெளியாகி விட்டு தான் கருவே தங்குகிறது.“ என்றாள்.
   இதைக் கேட்டதும் எனக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.

   பெற்றோர்களே.... ஏன் இப்போது இருக்கும் பெண்களுக்கு இப்படியாகிறது என்று யோசித்தால், பெண்களின் கருபப்பை வலு இல்லாமல் இருப்பது தான் காரணம் என்பது நமக்கே புரிந்து கொள்ள முடியும்.
   நான் பெரிய பெண்ணாகி வீட்டிற்குள்ளேயே இருந்த பதினொரு நாளும் காலையில் எழுந்ததும் இரண்டு நாட்டு கோழி முட்டையை உடைத்து எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பச்சையாகவே வாயில் ஊற்றுவார்கள். பிறகு திரும்பவும் உடைத்த அதே இரண்டு முட்டை அளவு நல்லெண்ணையை வாயில் ஊற்றி விழுங்கச் சொல்வார்கள்.
   அதன் பிறகு நிறைய நெய் ஊற்றி செய்த உளுந்து களியைச் சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பாட்டுடன் இந்த மூன்றையும் நிச்சயம் பதினொரு நாளும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொடுப்பார்கள். (ஏன்டா நாம் பெரியபெண் ஆனோம் என்று  இருந்தது) இருந்தாலும் சில நாட்கள் சாப்பிட்டேன்.
   
    ஆனால் இப்போது இருக்கும் பெண் பிள்ளைகள் அதையெல்லாம் சாப்பிடுவதை மிகவும் கேவலமாக நினைக்கிறார்கள். தவிர இங்கே வயதுக்கு வந்த விசயத்தைக் கூட தன் பெற்றோர்களிடம் தெரிவிப்பது இல்லையாம்.
    பெற்றோர்கள் (நம்மவர்களே) “இப்போது இருக்கும் குழந்தைகள் நிறைய செர்லக்ஸ் சாப்பிடுகிறார்கள். அதிலேயே எல்லா சத்தும் இருக்கிறதே“ என்று அலட்சியமாக சொல்கிறார்கள். இது தவறு.
    ஒரு பெண் பூப்படைந்த நாட்களில் அவளின் கருப்பைக்கும் உடலுக்கும் போஷாக்கான உணவைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் பிற்காலத்தில் குழந்தைபிறக்கும் பொழுது ஏற்படும் பிரட்சனைகள் குறையும்.
   பெற்றோர்கள் உணர்ந்து செயல்படுங்கள்.

டிஸ்கி – நாளைக்கு “அ உ“ போல் கணவன் அமைந்தால் “பூ க“தைச் சுற்றி அடிக்கவும் வசதியாக இருக்கும்.

அருணா செல்வம்.

18.06.2014

ஞாயிறு, 15 ஜூன், 2014

சிந்தையிலே சிறை வைத்தவர்!!





பத்துமாதம் வயிற்றுக்குள்
   பத்தியமாய்ச் சுமக்கவில்லை! – ஆனால்
சித்தத்தில் உன்நினைவைச்
   சிறிதேனும் இறக்கவில்லை!

தாலாட்டிப் பாலூட்டிப்
   பார்த்திருந்தே இரசிப்பதில்லை! - ஆனால்  
ஆளாகி நீஉயர
   அறிவுருத்த மறப்பதில்லை!

உயிரிருந்தால் போதுமென்ற
   உணர்வுடனே இருப்பதில்லை! – ஆனால்
உயிருக்குள் உனைவைத்த
   உள்ளுணர்வைச் சொல்வதில்லை!
     
தந்தையிவர் எனக்காட்டும்
   தாய்மட்டும் உயர்வில்லை! – உனைச்
சிந்தையிலே சிறைவைத்த
   தந்தைக்கோ நிகரில்லை!

அருணா செல்வம்
15.06.2014

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
  

  


வெள்ளி, 13 ஜூன், 2014

பேதையால் “பேக்கு“ ஆனேன்!!



பேதைப்பெண் என்றுன்னை நான்அ ழைத்தால்
    பேக்கென்று எனைச்சொல்வார்! என்னில் வாழும்
மேதைப்பெண் நீயடி!தேன் விழியால் பேசிப்
    போதைக்கண் தள்ளுகிறாய்! சூடித் தந்த
கோதைப்பெண் கொஞ்சுதமிழ் தீட்டி, மாய
    கோகுலனைக் குடிகொண்டாள்! மிதிலைச் செல்வி
சீதைப்பெண் பார்வையாலே இராமன் சிக்கி
    வாதைக்கண் பட்டதுபோல் வாடு கின்றேன்!


அருணா செல்வம்

புதன், 11 ஜூன், 2014

இடையிலே கோடு போட்டால்.... (நகைச்சுவை நிகழ்வு)



    ஒரு முறை நான் இந்தியா சென்றிருந்த போது என் உறவினரின் பையன் ஒருவன், அவனுக்கு அப்பொழுது எட்டு அல்லது ஒன்பது வயது தான் இருக்கும். அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.
என்னவென்றால்...
   “நம் ஊரில் சுவற்றில் எறும்புகள் வரிசையாகப் போவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?“ என்று கேட்டான்
    இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு இதைப் பார்க்காமல் இருந்திருப்போமா...? “ம். பார்த்திருக்கிறேன்“ என்றேன்.
    “அப்படி எறும்புகள் வரிசையாகப் போகும் போது அதன் இடையில் நம் கை விரலால் கோடு போட்டால்.... அப்பொழுது எறும்புகள் தடுமாறுகிறதே... ஏன்?“ என்று கேட்டான்.
   நான், “அடடா... இந்தப் பிள்ளை இவ்வளவு புத்திசாலித் தனமாகச் சிந்திக்கிறதே என்று வியந்து இப்படி விளக்கம் சொன்னேன்.
   “அதாவதுப்பா.... எறும்புகளுக்குக் கண் தெரியாது. ஆனால் மோப்ப சக்தி அதிகம் உண்டு. அந்த மோப்ப சக்தியைக் கொண்டு அவைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லுகின்றன. அப்படி செல்லும் போது நம் கை விரலால் அதனின் இடையில் கோடு போட்டால் நம் கையில் உள்ள வாசனை அங்கே படிந்துவிடும். எறும்புகள் இந்த புதுவித வாசனையால் வழி தெரியாமல் தடுமாறுகிறது“ என்று சொன்னேன்.
   அவனும் சற்று உன்னிப்பாக இதைக் கேட்டான். எனக்கு அவனுக்கு ஒரு விளக்கத்தைச் சொல்லிக்கொடுத்த பெருமை மனதில் ஒட்டியது. ஆனால் இது சற்று நேரம் தான்.
   அவன் சொன்னான்..... “ஆன்டி... நான் சொன்னதை நீங்கள் புரிஞ்சிக்கவே இல்லை. எங்கேயாவது இத்துணுன்டு எறும்போட இடையில நம்ம கைவிரலால கோடு போட முடியுமா....? எறும்பு செத்தடும்மே....“ என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
   அப்போதுதான் எனக்கு அவனின் வார்த்தை ஜாலம் புரிந்தது. பயபுள்ள எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்க.


அருணா செல்வம்.
12.06.2014

வியாழன், 5 ஜூன், 2014

சத்திரத்துச் சாப்பாடு!



    நாகப்பட்டினத்தில் காத்தான் சத்திரம் என்று ஒன்று இருந்தது. அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த காளமேகப்புலவர் உணவுக்காகச் சென்றார். பகலெல்லாம் காத்திருக்கச் செய்து, இரவில் நெடுநேரத்திற்குப் பின்னரே சாப்பாடு என்று ஏதோ ஒன்றையும் அங்கே அவருக்குப் போட்டார்கள். கவிஞரின் பொறுமை அதற்குமேலும் நிலைபெறவில்லை. உடனே இப்படிப் பாடுகின்றார்.

கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

பொருள்.

ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஓர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும்.
(இதுவும் ஒரு சத்திரமோ? என்பது குறிப்பு.)

    இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன் செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடம் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான். அப்போது, கவிஞர் அவனுடைய மனமாற்றத்தைப் பாராட்டியவராகப் பொருளினை மாற்றி உரைத்து அவனை மனமகிழுமாறு செய்தார்.
  
படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

செவ்வாய், 3 ஜூன், 2014

உன்னையே நினைத்திருந்தேன்!!




உன்னையே நினைத்தி ருந்தேன் – அதனால்
உலகத்தை நானோ மறந்தி ருந்தேன்!           (உன்னையே)

கண்ணிலே உறக்க மில்லை – விழி
காண்பது உனையன்றி வேறேது மில்லை!   (உன்னையே)

காலையில் கதிரவன் காட்சியில் தெரிந்தாய்
கடலின் ஓசையில் காதினுள் நுழைந்தாய்
சோலையில் மணம்தரும் மலர்களில் சிரித்தாய்
சொக்கிட பார்த்ததில் சுயத்தினைக் கெடுத்தாய்... (உன்னையே)

கடமையைச் செய்திடும் அந்த நேரத்திலும்
கடவுளை வணங்கிடும் நல்ல நேரத்திலும்
நடந்திடும் இயற்கை தரும் சூழலிலும்
நாலுபேர் அமர்ந்து பேசும் கூட்டத்திலும்....  (உன்னையே)

அறுசுவை உணவும் சுவைக்க வில்லை
அழகிய ஆடையும் ரசிக்க வில்லை
ஒருசுவை பார்வையில் ஆயிரம் தொல்லை
உணர்ந்தேன் இவைதாம் இன்பத்தின் எல்லை... (உன்னையே)

அருணா செல்வம்

03.06.2014

ஞாயிறு, 1 ஜூன், 2014

போதை!!





பீர்அடித்த போதையினை உன்றன் கண்கள்
    பீறிட்டுக் கொடுக்குதடி! களத்து மேட்டில்
போரடித்து உழைக்கின்ற மறவன் நெஞ்சுள்
    பொங்குதடி அமுதமெனக் காதல் வெள்ளம்!
தேரெடுத்து வருகின்ற காம தேவன்
    தேன்மழையைப் பொழிகின்றான்! தேவி உன்னைச்
சீரெடுத்து நான்படிக்க நீயும் சொக்கச்
    சித்திரமாய்த் தீட்டிடுவோம்! கவிதை மெல்ல!

அருணா செல்வம்.