நட்புறவுகளுக்கு வணக்கம்.
நான்
எப்படியாவது கோச்சடையான் திரைப்படத்தைத் திரையரங்கில் தான் பார்க்கவேண்டும் என்ற
எண்ணத்தில் இருந்ததால் அதை நேற்று நிறைவேற்றிக் கொண்டேன். ஆனால்.....
நான், என்
தோழியர் இருவர் மட்டும் படம் பார்க்கப் போவதாக முன்பே பேசி நேரம் குறித்துவிட்டோம்.
ஆனால்..... கடைசி நேரத்தில் எங்கள் மூவரின் கணவர்மார்களும் கூடவே வருவோம் என்று
அடம்பிடித்ததால்....(?!) வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்ல நேர்ந்தது. இதனால்
என்ன குறை என்கிறீர்களா....? பின்னே இருக்காதா...?
ரஜினியின்
தீவிர ரசிகையான என் ஒரு தோழி(1).... ரஜினியைத் திரையில் காட்டியதும் கைதட்டி
விசில் அடிக்கப் போவதாக ஏற்கனவே சொல்லி இருந்தாள். இவர்கள் உடன் வந்ததால் மரியாதை
நிமிர்த்தமாக அந்த ஆசை நிறைவேராமல் போய்விட்டதே...!!!
நாங்கள்
மூன்று பெண்கள் படம் பார்த்ததைப் “பெண்களின் பார்வையில் கோச்சடையான்“ என்ற தலைப்பிட்டது
ஏன் என்றால் இரண்டு பெண்கள் சேர்ந்தாலே அதைக் கூட்டம் என்று கூறலாம் என்று யாரோ
ஒரு அறிஞர் சொல்லி இருக்கிறார். இங்கே மூவர்! தவிர பெண்கள் இரண்டு பேர் எதையாவது
பேசினாலே... அதைக் கேட்கும் மற்ற பெண்களின் பேச்சும் அதுவாகவே தான் இருக்கும்.
அதனால் தான் இந்த தலைப்பு.
சரி
விசயத்திற்கு வருகிறேன். திரையரங்கிற்குள் போனதுமே.... “என்ன.... ஒரு டிக்கெட்
13.95 யுரோவா....? நம்ம ஊருக்கு ஆயிரம் ரூபாயிக்கு மேலேயே ஆகிறதே.... இவ்வளவு பணம்
கொடுத்து பார்க்கத்தான் வேண்டுமா....? இன்டர்நெட்டிலேயே வீட்டில் பார்த்துவிடலாம்“
என்றாள் ஒரு தோழி(2) (தோழிகள் இருவரும் தன் பெயரை வெளியடுவதை விரும்பவில்லை)
இருந்தாலும் 3டி கண்ணாடி அணிந்து ஒரு வழியாக படம் பார்த்துவிட்டு
வந்துவிட்டோம்.
வெளியில்
வந்ததும் எங்களின் கணவர்கள் எங்களை ஒரு பூங்காவில் விட்டுவிட்டு கால்பந்தாட்ட
மைதானத்திற்குச் சென்று விட்டார்கள்.
அப்பொழுது
எங்களுக்குள் பேசியது. உங்களுக்கும்....
அருணா- “படம் எப்படி இருந்தது...?“
தோழி 1 – “சூப்பர். ஆயிரம் என்ன இரண்டாயிரம் கூட கொடுக்கலாம்.
என்னதான் அனிமேஷன் படம் என்றாலும் நம் நாட்டிற்கே உரிய கதையமைப்புக்கு கே.எஸ்
ரவிக்குமாரைப் பாராட்டலாம். அதைவிட புதிய தொழில் நுட்பத்தைத் தமிழ் படத்தில் அறிமுகப்
படுத்திய சௌந்தர்யாவிற்கு ஒரு சலுட் பண்ணலாம்“ என்றாள்.
தோழி 2 – “என்னமோ தெரியலையடி. ரஜினி மற்றும் மற்றவர்களையும்
ஏதோ குட்டை க்குட்டையாகக் காட்டியது போல் இருந்தது. அதிலும் கோச்சடையான்
உருவத்தில் இடுப்பிலிருந்து மேல் பாதியை அருமையாக வடிவமைத்துக் கீழ் பாதியைக்
குட்டையாகவும் கோணல் காலாகவும் இல்லாமல் வடிவமைத்து இருக்கலாம்.“
அருணா – “ஏய் இப்படியெல்லாம் சொல்லாதே. ரஜினி
ரசிகர்கள் உன்னைச் சும்மாவிட மாட்டார்கள்.“
தோழி 2 “அதற்கெல்லாம் நான் கவலை படலை. நான் உண்மையைத்
தான் எப்பொழுதும் பேசுவேன். அந்தக் கதாநாயகி உருவத்தில் ஏன் கண்களுக்கு அவ்வளவு
மை? அந்த தீபிகா படுகோணுடைய அழகு அதனால் கொஞ்சம் குறைவாகவே தான் தெரிந்தது. ஒரு
முறை தான் உருவத்தை வடிவமைக்கிறார்கள். அதை அழகாக செய்திருக்கலாம்.“
அருணா – “நீ இதையெல்லாத்தையும் கூட பாப்பியா...?!“
தோழி 1 – “அவளை விடுடி. நான் சொல்லுறதைக் கேள். ஒளிப்பதிவு
ராஜிவ் மேனன். என்னமா அற்புதமாக இருந்தது. நாம எதிர்பார்க்காத இதுவரையில்
பார்த்திராத பிரமான்டமான அரண்மனை அமைப்புகள். அதில் வடிவமைத்துள்ள சிலைகள்
அற்புதம். பாடல் காட்சிகளில் அந்த மலையமைப்புகள்.... பள்ளத்தாக்குகள்.... சோலை....
அடடா... நாம் வாழ்நாளிலே உண்மையில் இந்த மாதிரியெல்லாம் பார்க்கவே முடியாது.
கண்கொள்ளா காட்சிகள்“
தோழி 2 – “ஆமா.... எல்லாம் அனிமேஷன் தானே. ஏதோ
எல்லாம் கிட்டகிட்ட தெரியும் என்று பார்த்தால்... தொடக்கத்தில் சூப்பர் ஸ்டார் எழுத்து
மட்டும் தான் கிட்ட தெரிந்தது. மற்றதெல்லாம் சாதாரணமாகத் தான் இருந்தது. வாள்
வீசும் பொழுது, சண்டையிடும் பொழுதெல்லாம் இந்த 3டியைக் கொஞ்சம் பயன்படுத்தி இருந்தால்
கொஞ்சம் திகிலுடன் படம் பார்த்தது போல் இருந்திருக்கும்.“
தோழி 1 – “அப்படி இருந்தால் சின்ன பிள்ளைகள்
பயப்படும் என்று தான் அப்படி எடுக்கவில்லை. சும்மா இரு. எதையாவது குறை
சொல்லிக்கொண்டே இருக்காதே. சரி. படத்தோட பாடல் எப்படின்னு சொல்லு.“
தோழி 2 – “எட்டு பாட்டு. கேட்க கேட்கத் தான் மனசுல
பதியும்ன்னு நினைக்கிறேன். கோச்சடையானக பாடும் பாடலில் உள்ள கருத்துக்கள் ஏற்கனவே
கேட்டது போலவே இருக்கிறது. ஒரு சமயம் வைரமுத்து வரிகளோ.... ஆனால் நான்
இசையமைப்பைக் குறையே சொல்ல மாட்டேன்ப்பா. ஏ.ஆர்.ரகுமான் சும்மா வெளுத்துக்
கட்டியிருக்கிறார்.“
அருணா – “படத்துல வர்ற நாகேஷ் கேரட்டரைப் பற்றி
எதுவுமே சொல்லலையே.“
தோழி 2 – “புது உத்தி தான். பாராட்டலாம். ஆனால்.... இப்பொழுது
வாழும் பழங்கால நடிகருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம்.“
தோழி 1 – “நீ எதையாவது குறை சொல்லிக்கிட்டே இரு. உண்மைய்யைச்
சொல்லுடி. இந்த படத்தில் நீ நிறைவாக எதையும் நினைக்கலை...?“
தோழி-2 - ஏன் இல்லை. நாம் கொடுத்த பணம், ரசினி
கோச்சடையானாக ஒரு ருத்திர தாண்டவம் ஆடுகிறாரே.... அது ஒன்றுக்கே செரித்துவிடும். நான்
மிகவும் இரசித்த காட்சி அது. சரி அருணா. கோச்சடையானுக்கு எவ்வளவு மார்க
கொடுக்கலாம்.
அருணா – மார்க்கா...?
புது தொழில் நுட்பத்திற்கு
ரஜினி + சௌந்தர்யா – 20
இசை
- 10
கதை வசனம்
- 10
ஒளிப்பதிவு - 10
சண்டை பதிவு - 10
மற்றவை - 5
மொத்தம் நாற்றுக்கு 65 மார்க் கொடுக்கலாம்பா. என்னடி
நான் சொன்ன அளவு சரியா...?
தோழி -2 சரியான அளவு தான்.
தோழி -1- ஓரளவிற்கு சரிதான். என்று முடித்தாள்.
அருணா செல்வம்
29.05.2014