வியாழன், 18 ஜூலை, 2013

அந்த நாலு பேருக்கு நன்றி!!





நட்புறவுகளுக்கு வணக்கம்.
    போன வாரம் பழைய குமுதம் ஒன்றில் வெ. இறையன்பு அவர்கள் எழுதிய சிறுகதையைப் படித்தேன். இதற்கு முன்னால் அவரின் கதை எதையும் நான் படித்ததாக ஞாபகம் இல்லை. அந்தக் கதையால் வந்த தாக்கத்தால் இந்த ஒரு வாரமாக வலையில் எதையும் எழுதவில்லை என்றே சொல்லாம். அந்த அளவு அந்த சிறுகதை என்னை யோசிக்க வைத்தது.
   அவர் எழுதிய “எமனுடன் ஒரு மணி நேரம்“ என்ற சிறுகதையை இப்பதிவின் கீழ் எழுதுகிறேன். அக்கதையைப் படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.
   என்ன... தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே இல்லையே.. என்பது போல் தெரிகிறதா...? சொல்கிறேன். நான், இந்த ஒரு வாரமாக பதிவிடவில்லை என்றதும் என் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவரும் முகம் அறியாத நட்புறவுகள் நால்வர் எனக்கு மின் அஞ்சல் அனுப்பி “என்னவாயிற்று? உடல்நிலை சரியில்லையா? ஏன் ஒரு வாரமாக பதிவு எதுவும் வெளியிடவில்லை? வேறு ஏதாவது பிரட்சனையா...?“ என்றெல்லாம் விசாரித்து இருந்ததார்கள். உண்மையில் இது எனக்கு மிக மகிழ்ச்சியான விசயம்!
   நம் ஊரில் இருந்து கொண்டு நாலுபேருடன் பேசிக்கொண்டு இருப்பது வேறு. தமிழில் யாராவது என்னிடம் பேசமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருக்கும்  என்னைப் போன்றவர்களுக்கு உண்மையில் இது அதிக சந்தோசத்தை அளிப்பதாகும்.
   இறந்த பிறகு தூக்கிக்கொண்டு போகும் அந்த நாலு பேருக்கு நன்றி என்று தான் பாடியிருக்கிறார்கள். ஆனால் உயிருடன் இருக்கும் பொழுது கண்டும் காணாமல் வாழுபவர்களின் நடுவில், “எப்படி இருக்கிறீர்கள்? ஏதேனும் உடல்நலப் பிரட்சனையா?“ என்று கேட்பவர்கள் இன்று மிகவும் குறைந்து விட்ட இந்த நாளில், எனக்காக மின் அஞ்சல் அனுப்பி விசாரித்தமைக்காகவும், அதனால் என்னைத் திரும்பவும் எழுதத் தூண்டியமைக்காகவும் அந்த நாலு பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி. நன்றி. நன்றி. நன்றி.
----------------------------------------------------------------
 
எமனுடன் ஒரு மணி நேரம்! (சிறுகதை)
(வெ. இறையன்பு)

    இரவு வெகுநேரம் படித்தும், எழுதியும் களைத்துப் போயிருந்தான். காலை வெகுநேரம் கழித்து எழுந்து வந்து கதவைத் திறந்தபோது, தாறுமாறாகக் கிடந்த செய்தித் தாள்களும், பால் பைகளும் அவனை எதிர் கொண்டன. குனிந்து அவன் அவற்றை எடுக்கும்போது எதிரே இருந்த உருவம் அவன் கண்ணில் பட்டது.
   கைகளைக் கட்டிக்கொண்டு, வலதுகாலை மடக்கி இடது பாதத்தில் வைத்தவாறு, கம்பீரமாக நின்றிருந்த அந்த நபரை இதுவரை அவன் கண்ணுற்றதில்லை.
   அவன், அவரிடம் “உங்களுக்கு யார் வேண்டும்?“ என்பது போல் பார்த்தான். அவன் வீட்டு முகப்பில் “வழிப்போக்கன்“ என்ற பெயர்ப்பலகை சன்னலைவிடப் பெரிதாக இருந்ததால், அவனுக்குத் தன்னைத் தேடவாய்ப்பு இல்லை என்று தோன்றியது. அவரிடமிருந்து சின்ன புன்முறுவல், இதழ்கள் பிரியாத பரிசாகப் புன்னகை. தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவரைக் கண்டு, அவனுக்கு இப்பொழுது எரிச்சல். எதுவும் பேசாமல் இப்படியே நின்றிருந்தால் எப்படி? அதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை.
வழிப்போக்கன் – உங்களுக்கு யார் வேண்டும்?
வந்தவர் – நீ தான் வேண்டும்.
வழிப்போக்கன் – (தன்னை ஒருமையில் அழைத்ததால் முகத்தைக் கடுகடுவென வைத்துக்கொண்டு) நன்றாகத் தெரியுமா?
வந்தவர் – தெரியுமே! அதுதான் பெயர்பலகை பெருசா இருக்கே! ஆளு சின்னதா இருந்தாத்தான் தாழ்வு மனப்பான்மையில பெயரைப் பெருசா போட்டுக்குவாங்க.
வழிப்போக்கன் – யார் நீ? எந்த இதழ்? என் எழுத்துக்களை வேணுமுன்னா விமர்சனம் செய். என் பேரா விமர்சனம் செய்ய உனக்கு எந்த உரிமையும் இல்லை.
வந்தவர் – நான் உன்னோட எழுத்துக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவன்.
வழிப்போக்கன் – முதல்ல நீ யாரு, சொல்லு...
வந்தவர் – நான் தான் எமன். உன்னோட இறுதிக்காலம் வந்திருச்சு. உன்னோட உயிரைக் கொண்டுபோக வந்திருக்கேன். போதுமா? (வழிப்போக்கன் எதிர்பார்க்கவில்லை, சிறிது நேரம் அங்கு அசாத்திய மௌனம் நிலவியது)
வழிப்போக்கன் – உள்ளே வாங்க... ஏன் வெளியே நிக்கிறீங்க...
எமன் – நீ பத்திரிக்கைக் காரங்களை புகழ்ந்து உன் கதையைப் பிரசுரம் பண்ணற மாதிரி, என்னைப் புகழ நெனைக்காதே!
வழிப்போக்கன் – (பலமாகச் சிரித்து) அந்த விஷயம் உனக்கும் தெரிஞ்சி போச்சா! உண்மையிலேயே நீ எமன்தான்! என்னோட உசிரை நீ எடுக்க எவ்வளவு நேரம் இருக்கு?
எமன் – இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.
வழிப்போக்கன் – சரி உள்ளே வா. பேசிக்கிட்டிருக்கலாம்.
எமன் – (உள்ளே நுழைந்து) பரவாயில்லையே! எமனையே உபசரிக்கிறயே!
வழிப்போக்கன் – உன்னைக்காட்டிலும் பயங்கரமான சகமனிதர்களை நாங்க சந்திச்சிப் பழக்கப்பட்டவங்க. ஒரு சந்தேகம்...
எமன் – கேளு!
வழிப்போக்கன் – நீ பாக்க ரொம்ப கம்பீரமா அழகா இருக்கயே!
எமன் – மரணம்னா கோரமா, கருப்பா, விகாரமா இருக்கும்னு நீங்க எழுதுனா அது மாதிரி நாங்க ஆக முடியுமா? மரணம் எல்லாத்தைக் காட்டிலும் அழகு, புரியுதா? உங்களுக்குப் பிடிக்காததை எல்லாம் அசிங்கமாவும், பிடிச்சதை அழகாகவும் சித்திரிக்கறவங்க தானே நீங்க.
வழிப்போக்கன் – என்னோட ஒரே ஒரு ஆசையை நிறைவேத்துவாயா?
எமன் – சாகும் போது கூட ஆசையா?
வழிப்போக்கன் – ஆமா. ஒண்ணே ஒண்ணுதான்! நான் செத்த பிறகு மக்கள் எல்லோரும் என்னா பேசுவாங்க, சக எழுத்தாளர்கள் என்னோட படைப்புகளைப் பத்தி என்னா பேசுவாங்கன்னு தெரிஞ்சிக்கணும்.
எமன் – அவ்வளவு தானே! கவலைப்படாதே. இப்பவே நான் சொல்லிடறேன். நம்ம ஊருல வெறிநாய் செத்துப் போனாக் கூட இரங்கல் கூட்டம் நடத்துவாங்கன்னு உனக்குத் தெரியாதா? வேலையே செய்யாம ரிட்டையர் ஆனவனுக்கும் பாராட்டுக் கூட்டம் போடுவாங்கன்னு தெரியாதா? செத்தபிறகு எல்லாருமே நல்லவன்தான்.
வழிப்போக்கன் – கொஞ்சம் தேநீர் சாப்பிடலாமா?
எமன் – தாராளமா! இன்னும் 55 நிமிஷம் இருக்கு. (வழிப்போக்கன் உள்ளே சென்று தேநீர் தயாரித்துக் கொண்டு வருகிறான். எமனுக்குத் தருகிறான்)
எமன் – உன்னைப் பார்த்தா நீ எதுக்கும் அசராக ஆளுன்னு தெரியுது. ஏன்னா என் பேராக் கேட்டவுடனேயே பலபேரோட உசிரு போயிடும். நீ அப்படியில்லாம கல்லு மாதிரி உக்காந்துக்கிட்டு குழம்பி வேற குடுக்கறயே.
வழிப்போக்கன் – நான் போட்ட தேநீர் குழம்பி மாதிரி இருக்குன்னு நக்கல் அடிக்கிறியா?
எமன் – ஆமா... உனக்கு இந்தத் தைரியம் எப்படி வந்துச்சி?
வழிப்போக்கன் – என்னோட கதை இருக்கட்டும். உன்னோட வேலையில நீ சந்திச்ச வித்தியாசமான சம்பவம் ஏதாச்சும் இருந்தா சொல்லேன்.
எமன்- நெறய இருக்கு.
வழிப்போக்கன் – நீ நேத்தே வந்திருக்கக் கூடாதா? நானும் அதை வைச்சு நாலைஞ்சு சிறுகதை எழுயிருப்பேனே!
எமன் – நீ செத்தாலும் உன்னோட கதை சிரஞ்சீவியா இருக்கணும்ன்னு ஆசைப்படறயா?  உலகத்தில் எல்லாமே அழிஞ்சி போயிடும். சிலது முன்னாடி, சிலது பின்னாடி... எதுவுமே எப்பவுமே இருக்காதுன்னு புரியாம நீ என்னா எழுத்தாளன்.
வழிப்போக்கன் – நான் ஒன்னும் நீடிச்சி நிக்க எழுதல. பல நேரத்துல வயித்துப்பாட்டுக்கு, சில நேரத்துல அதைத்தவிர வேற எதுவுமே எனக்குத் தெரியாதே... என்ன பண்றது?
எமன் – சரி. ஒரு பன்னண்டு வயசுப் பாலகன். என்ன நடக்குதுன்னே தெரியாத அறியாப்புள்ள சட்டையக் கழட்டிட்டு உக்காரவச்சி உலர்ரெட்டி குடுக்கறாங்க. அந்தப் பையன் என்ன நடக்குதுன்னே புரியாம மலங்க மலங்க விழிக்கிறான். அந்தப் பிஞ்சு முன்னாடியே அவனைப் பாதுகாத்தவங்களைச் சுட்டுக் கொல்றாங்க. அப்புறம் அந்தப் பால்முகம் மாறாத பையனை துப்பாக்கியால கைக்கெட்டின தூரத்தில் நின்னுக்கிட்டு சுட்டு உடம்பைச் சல்லாடையாகத் துளைக்கிறாங்க. இத மட்டுந்தான் நீங்க பாத்திருப்பீங்க. அதுக்கே நீங்கெல்லாம் கொதிச்சிப் போறீங்க. அதுக்கு நடுவுல நடந்ததை நான் சொன்னா நீங்க யாருமே சாப்பிடக்கூட மாட்டீங்க. அவனோட உயிரை எடுக்கும் போது தான் நானே அழுதேன். (எமன் குலுங்கிக் குலுங்கி அழுகிறான். அவரை வழிப்போக்கன் தேற்றுகிறான்)
வழிப்போக்கன் – (சிறிது நேரம் கழித்து) எமனா இருந்த உனக்குக்கூட அழுகை வருமா?
எமன் – நான் மனுஷனா இருந்து அழுததைவிட எமனா இருந்தப்ப அழுததுதான் அதிகம்.
வழிப்போக்கன் – சாவைப்பத்தி நீ என்னா நினைக்கிற?
எமன் – என்னோட வழக்குல நானே தீர்ப்பு எழுதக்கூடாது. இருந்தாலும் உனக்காகச் சொல்லறேன். சரியான சமயத்துல சாகறவன்தான் வாழுறான்.
வழிப்போக்கன் – புரியல.
எமன் – உன்னுடைய கதையை விடவா இது சிக்கலா இருக்கு. சரியான நொடியை சாவறதுக்காகத் தேர்ந்தெடுக்க முடிஞ்சா, எல்லா மனுஷனுமே தெய்வமாயிடுவான். ஆனா சாத்தியமில்லை. ஜெயிச்சிக்கிட்டே இருக்கும் போது சீட்டாட்டத்தை விட்டுட்டுப் போக மனசு வராது.
வழிப்போக்கன் – எனக்குக் கொஞ்சம் அவகாசம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
எமன் – பாத்தியா... நீயும் பயப்பட ஆரம்பிச்சிட்டே.
வழிப்போக்கன் – அடச்சே! பயப்படலேப்பா. ஒரு புதினம் எழுதிக்கிட்டிருக்கேன். இன்னும் அஞ்சு பக்கம் எழுதினா முடிஞ்சிடும்.
எமன் – முடிக்காம விட்டுடு. அதுதான் நல்லது.
வழிப்போக்கன் – ஏன்?
எமன் – சரியா முடிக்காம விட்டா விருது கிடைக்கறதுக்கு வாய்ப்பு அதிகம். செத்துப்போறது விருதுக்கான கூடுதல் தகுதில்லையா?
வழிப்போக்கன் – அப்ப ஏன் தயங்குற. சீக்கிரம் என் உயிரை எடுத்துக்க. நான் தயார். தினமும் “இதுதான் என்னோட கடைசி நாள்“ அப்படீன்னு நெனச்சி வாழ்ந்தவன் நான். என்னோட வாழ்க்கையை முழுவதுமா வாழ்ந்த திருப்தி எனக்கு இருக்கு. எடுத்துக்க. எவ்வளவு நேரம் கண்ணாமூச்சி வௌயாடுவே?
எமன் – பொறு, பொறு. உச்சக்கட்டத்தை அவசரத்துல முடிச்சா கதை கெட்டுப்போயிடும்.
வழிப்போக்கன் – அப்ப எப்ப முடிப்பே?
எமன் – இப்ப முடிக்கறதா இல்லே.
வழிப்போக்கன் – ஏன்? சீக்கிரம் முடி. இப்பவே..
எமன் – என்னைக்கண்டு பயப்படாதவனோட உயிரை எடுக்கறதுல என்ன சுவாரஸ்யம்? எழுத்தாளன்னா ஓரளவு வீரமா இருப்பான்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனா உன்னளவுக்கு யாரையும் பாக்கலே.
வழிப்போக்கன் – அப்புறம் ஏன் சாவுக்குப் பயப்படாத பாரதியை சின்ன வயசிலேயே சாகடிச்ச?
எமன் – விட்டிருந்தா நீங்க அவரை பரிதாபமா சாகடிச்சிருப்பீங்க. அவர் செத்தும் வாழணும்னு சாகடிச்சேன்.
வழிப்போக்கன் – ஏன் என்னை விடறே?
எமன் – சாவுக்குத் தயாராக காத்துக்கிட்டிருக்கிற உன்னை சாகடிக்கிறது செத்த பாம்பை அடிக்கிற மாதிரி. அதனாலே நீ வாழ்! இன்னும் நெறய நாளு வாழு! ஆனா ரொம்ப எழுதிடத. அப்புறம் வாழும் போதே செத்துப்போயிடுவே. அடிக்கடி உன்னோட முகத்தையும், எழுத்தையும் எல்லாத்துலயும் தொடர்ந்து பாத்தா வெறுப்பு தான் வரும். உன்னோட எழுத்து வராதான்னு எல்லோரும் காத்திருக்கணும். புரிஞ்சிக்க. நான் வரேன்!!
----------------------------------------------------------
நன்றி – குமுதம் வார இதழ்.

26 கருத்துகள்:

  1. /// மரணம் எல்லாத்தைக் காட்டிலும் அழகு ///

    உண்மை... இறந்த பின்னும் பலரின் நினைவில் இருந்தால்...!

    வெ. இறையன்பு அவர்களின் சிறுகதை (படித்திருந்தாலும்) என்றும் அருமை...

    நால்வருக்கு நன்றி சொன்ன விதம் நன்று... மனதின் ஏக்கம் புரிகிறது... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ஊக்கவிப்பான கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. அன்புத் தோழியே!..
    அருமையான கதையைப் பகிர்ந்தீர்கள் மிக்க நன்றி!

    பல இடங்களில் கதையின் தாக்கம் யதார்த்தத்துடன் இழைந்தே இருக்கின்றது, இது உங்களுக்கு மட்டுமல்ல,.. எனக்கும், இன்னும் இங்கு எல்லோருக்கும்!

    உங்களைச் சில நாட்களாகக் காணவில்லையே என விசாரிக்க நான்குபேராவது இருந்தார்களே... அவ்வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதானே!..
    அதிர்ஷ்டம் எல்லோருக்கும் இருப்பதில்லையே...

    உங்களை விசாரித்த அன்புள்ளங்களுக்கும் அனைத்தையும் இங்கு பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் என் இனிய நன்றிகள்!

    தொடருங்கள்... காத்திருப்புக்கள் தொடருகின்றன...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  3. மரணத்தை பற்றிய அருமையான கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  4. இறையன்பு கதை எழுதி இருக்கார்ன்றதே புது தகவல். அக்கதையை பகிர்ந்தமைக்கு நன்றி அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இறையன்பு கதை எழுதி இருக்கார்ன்றதே புது தகவல்.“

      எங்க இதையெல்லாம் தேடிப் போய் படித்தால் தானே... எந்த நேரமும் முகநுர்லில் இருந்தால்... ஹா ஹா ஹா... (இது என் மைண்ட் வாய்ஸ். எனக்கு மட்டும் தான் கேட்கும்)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தொழி.

      நீக்கு
  5. அழகானதோர் கதை தோழி. பகிர்ந்தமைக்கு நன்றி.

    நம் மீது அக்கறை கொண்டு நம்மை விசாரிக்கும் முகமறியா உறவுகள், நண்பர்கள் கிடைப்பது அரிது. அவர்கட்கு நன்றி சொன்ன விதம் அருமை.

    வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. நண்பர்களுக்கு நன்றியை அழகாக தெரிவித்து அதனுடன் அருமையான கதையையும் பகிர்ந்தளித்து இருக்கிறீர்கள். நன்றி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தமிழ்த் தாகம்.

      நீக்கு

  7. வணக்கம்!

    மறையென்று தாயை மதிமேல் தரித்தால்
    குறையொன்றும் இல்லையெனக் கூறு! - முறையாய்
    நிறையன்பு கொண்டு நெடுந்தமிழ் சூடும்
    இறையன்பு வாழ்க இனிது!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும்
      இறையன்பு அவர்களை வாழ்த்தியமைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  8. அருமையான கதை...
    இறையன்பு அவர்கள் சிறந்த சிந்தனையாளர்.
    அருமையான பேச்சாளர்...
    அவரது கதையை பகிர்ந்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      (நான் அவரின் ஆக்கங்களைப் படித்ததில்லை)

      நீக்கு
  9. அந்த நாலு பேரில் நான் இருக்கிறேனா?? இன்னும் கதை படிக்கவில்லை படித்து முடித்து கருத்து எழுதறேன்.அப்துல் தையுப்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தையுப் அண்ணா... படிக்காமலேயே பின்னோட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி.
      (அந்த நாலு பேரில் நீங்கள் இல்லையென்றாலும்... பதிவிட்டப்பிறகு போன் பேசினீர்கள். இல்லையென்றால்
      உங்களையும் சேர்த்து ஐந்து பேர் என்று எழுதியிருப்பேன்)

      மிக்க நன்றி.

      நீக்கு
  10. அந்த நாலு பேரில் நான் இல்லை ஏன் என்றால் எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் நானும் இந்த பக்கம் சரியாக வரவில்லை தோழி. கதை சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களே பாவம்... நான் தான் உங்களை விசாரித்து இருக்க வேண்டும். என் தவறு தான் சசிகலா.
      உடல்நலம் தேற வேண்டுகிறேன்.

      நன்றி சசிகலா.

      நீக்கு
  11. அந்த நாலுபேருக்கு நானும் நன்றி சொல்கிறேன்! நல்ல கதை கிடைத்ததே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  12. நல்ல கதை........

    தொடர்ந்து எழுதுங்க.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிங்க.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு