செவ்வாய், 30 ஜூலை, 2013

ஒவ்வொரு நிகழ்வும்...!! (நிமிடக்கதை)




     வேலைவிட்டு வந்ததிலிருந்து தன் கணவன் ஏதோ கவலையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்தது போல் தெரிந்தது கோமதிக்கு.
    எப்பொழுதும் இப்படி இருக்க மாட்டாரே.... ஏன்...? இன்று என்னவாகியது...? யோசனையுடன் அருகில் சென்று மெதுவாக விசாரித்தாள். தொடக்கத்தில் “ஒன்றுமில்லை“ என்றவர், அவள் திரும்பவும் கேட்க, சற்று கோபத்துடனும் கவலையுடனும் சொன்னார்.
    “இன்னைக்கு எப்பொழுதும் வர்ற பஸ்சுல தான் வந்தேன். நான் ரெண்டு பேர் உட்கார்ற சீட்டுல உட்கார்ந்து இருந்தேன். ஒரு ஸ்டாப்புல ஒரு பொண்ணும் ஒரு ஆளும் ஏறினார்கள். அவங்களுக்கு உட்கார இடம் இல்லை. அந்தப் பொண்ணுக்கு நம்ம பொண்ணோட வயசு தான் இருக்கும். பார்க்கவும் நம்ம பொண்ணு மாதிரி தான் இருந்தாள். வயிறு கொஞ்சம் உப்புன மாதிரி.... கர்ப்பமாக இருக்கிற மாதிரி தெரிஞ்சுது.
   அதுக்கு அடுத்த ஸ்டாப்புல என் பக்கத்துல இருந்த ஆள் இறங்கிட்டாரு. அவர் இறங்கியதும், அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே நான் ஜன்னலோரம் நன்றாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் உட்கார இடம் கொடுத்தேன்.
   ஆனால் அவள் உட்காரவில்லை. நானும், “வந்து உட்காரும்மா...“ என்றேன். அவள் திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். அவனும் “போய் உட்காரு“ என்றான். ஆனால் அவள் உட்காராமல் என்னைப் பார்த்துப் “பரவாயில்லைங்க“ என்று சொல்லி விட்டு நின்று கொண்டே வந்தாள்.
    எனக்குத் தான் என்னவோ போல் இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அடுத்த ஸ்டாப் வந்தபோது எழுந்து நின்று கொண்டேன். பிறகு அவளும் அவனும் அமர்ந்து கொண்டார்கள். அதே சமயம் அவர்களுக்குப் பின்பிருந்த சீட்டு காலியாகவும் நான் அதில் அமர்ந்து கொண்டேன்.
    அப்போ அந்தப் பெண் அவள் கணவனிடம் சொன்னாள்... என்னங்க நீங்க. அந்த ஆள் இடம் விட்டதும் நீங்களும் உடனே என்னை உட்கார சொல்லிட்டீங்க. என்றாள்.
    ஏன் அதனால் என்ன...?அவன் கேட்டான்
    அதனால என்னவா...? கேட்க மாட்டீங்க. இப்போதெல்லாம் சின்ன பையன்களைக் கூட நம்பிடலாம். இந்த மாதிரி கிழடுகளை நம்பவே கூடாதுங்க... என்றாள். எனக்கு அதிலிருந்து மனசு என்னவோ போல் ஆகிவிட்டது. நான் என் பொண்ணு மாதிரி நினைச்சேன். சே.... ஏன் தான் பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு கோண புத்தி வருதோ...“ தலையில் கைவைத்த படி கவலையாகச் சொன்னார் சிவராமன்.
   “சரி விடுங்க. அவள் உங்களோட தோற்றத்தைப் பார்த்துப் பயந்திருப்பாள். அவளுக்கு உங்களோட வயசு தெரியாது இல்லையா...“ என்று சொல்லி விட்டு சிரித்த கோமதி அந்த சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தினாள்.

   கல்லூரி போய்விட்டு வந்த விமலா கோபமாக புத்தகத்தை வைத்துவிட்டு அமர்ந்தாள். “என்னம்மா... என்னவாச்சி?“ அவளின் தலையைத் தடவி விசாரித்தார் சிவராமன்.
   “பாருங்கப்பா.... இன்னைக்கு பஸ்சுல இடம் இல்லைன்னு ஒரு வயசானவர் பக்கத்துல போய் உட்காந்தேன். ஆனால் அந்த கிழம் பண்ணின அதம் இருக்குதே.... சே...“ கோபமாக முகம்சுளித்தாள். “உடனே எழுந்து, நல்லா நாலுபேருக்குத் தெரியிற மாதிரி திட்டுறது தானே...“ கோமதி கோபமாகச் சொன்னாள்.
    “இல்லம்மா... அவரைப் பார்க்க நம்ம அப்பா மாதிரி தெரிந்தார். அவரை எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்த பிடிக்கல. பேசாம எழுந்து நின்னுக்கினே வந்தேன்“ என்று சொல்லிவிட்டு எழுந்து போனாள்.
   சிவராமன் மனைவியைப் பார்த்தார். கோமதி அவரை அர்த்தத்துடன் பார்த்தாள். அவர் புரிந்து தலையாட்டினார்!

   ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடத்தைப் புகட்டுகிறது.

அருணா செல்வம்.
31.07.2013

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மாற்றம்!! (நிமிடக் கதை)




   கொஞ்ச நாட்களாக தன் கணவனின் போக்கில் ஏதோ மாற்றம் தெரிவது போல் உணர்ந்தாள் சகுந்தலா. திருமணமாகி இந்த இருபத்தைந்து வருடத்தில் இப்பொழுது தான் இந்த மாற்றம்!!
   வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு டை அடித்துக் கொள்வதும், டீசர்ட் போட்டு கொள்வதும், ஏதோ தன்னை இளைஞனாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பது போல் நடையில் ஒரு மிடுக்கைக் கொண்டு வருவதும், அலுவலகம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பிவிடுவதும்.... இதெல்லாம் போன இரண்டு மாதத்திற்கு முன்பு கூட இல்லை.
    இந்த இரண்டு மாதமாகத் தான் இப்படி ஒரு மாற்றம். என்னவாக இருக்கும்? யோசித்தாள். யோசித்தவள் தொலை பேசியை எடுத்து அவன் வேலையின் எண்களை அழுத்தினாள். எதிர் முனையில் “ஹலோ...“ எப்பொழுதும் பேசும் கோபாலன் குரல் இல்லாமல், அந்தப் பெண்ணின் குரலிலேயே அழகு தெரிந்தது.
    போனை வைத்துவிட்டு கோபாலன் வீட்டிற்கு எண்களை அழுத்தினாள். எதிர் முனையில் கோபாலன் மனைவியிடம், “என்னம்மா உன் கணவர் வேலைக்குப் போகலையா...?“ கேட்டாள்.
    “இல்லைம்மா. அவருக்கு இங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே வேலை கிடைச்சிடுச்சி. அதனால அந்த வேலையை விட்டுட்டு இங்கத்தான் ரெண்டு மாசமா வேலைக்குப் போறார். சார் சொல்லலைங்களா...?“ அவள் கேட்க, கணவனை விட்டுக்கொடுக்க முடியாமல் “ம்... சொன்னாரு. நான் தான் மறந்துட்டேன்“ என்றபடி போனை வைத்தாள்.
    அலுவலகத்தில் நடக்கும் மாற்றங்களை ஒன்று விடாமல் உடனே தன்னிடம் சொல்லி விடும் கணவன் இதை ஏன் தன்னிடம் சொல்லவில்லை....? யோசித்து முடிவெடுத்தாள்.

   அவள், அவள் கணவனின் அலுவலகத்தில் நுழைந்த போது, அவன் ஓர் அழகான இளம்பெண்ணிடம் ஏதோ ஒரு தாளைக் காட்டிச் சிரித்துச் சிரித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் சற்று தயக்கத்துடனும், பயத்துடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
    அருகில் வந்து நின்ற இவளை அங்கே கண்டதும் அவனின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அவளைப் பார்த்தாள். அவள் கையிலிருந்த தாள்களில் கவனத்தைச் செலுத்தியபடி தன் வேலையில் கவனமாக இருந்தாள்.
   “நீ எங்க இங்க?“ குரலில் சற்று அதிர்ச்சி கலந்த கோபமும் தெரிந்தது.
   “இங்க பக்கத்தல தான் ஷாப்பிங் வந்தேன். என் கிரெடிட் கார்டை மறந்து வீட்டில வச்சிட்டு வந்துட்டேன். அதான் உங்ககிட்ட வாங்கிக்கலாம்ன்னு வந்தேன்.“ கூசாமல் பொய் சொன்னாள்..
   “வெளியே போறதுக்கு முன்னாடியே யோசிக்கிறது இல்ல. இப்ப பாரு. சரி. ஆபிஸ் ரூமுல தான் இருக்கு. வா. எடுத்துத் தர்றேன்.“
   அவன் பின்னாலே போய் கார்டை வாங்கிக் கொண்டவள், “ஏங்க யாரு அந்த பொண்ணு புதுசா...?“ கேட்டாள்.
   “அந்த பொண்ணா.... பேரு வசந்தா. கோபால் வேலையை விட்டு போயிட்டான். அந்த இடத்துல இந்த பொண்ணு தான் வேலை செய்யுது. பாவம் ஏழை பொண்ணு.“ குரலில் அனுதாபம்.
   “வேலையில எந்த மாற்றமானாலும் எங்கிட்ட சொல்லுவீங்க. ஆனால், கோபால் வேலையை விட்டுட்டு போனதையோ... இந்த பொண்ணு வேலைக்குச் சேர்ந்ததையோ எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லவே இல்லையே நீங்க. ஏன்...?“ அவள் கேட்டதும்....
   “ஏதாவது டென்ஷன்னுல மறந்துட்டு இருப்பேன். ஏன் எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லனுமா?“ கடுகடுப்பாக கேட்டான்.
   அவனின் கோபம் புரிந்தது.
   “அதுக்கில்லைங்க. அந்த பொண்ணைப் பார்த்தா... இருபது வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பெண் குழந்தை இறந்தே பிறந்துதே... அந்த குழந்தை ஞாபகம் வருதுங்க. அந்த குழந்தை இருந்திருந்தால் இந்த பொண்ணு வயசு தான் இருக்கும்.  ஏழை பொண்ணுன்னு சொன்னீங்க. அவளுக்குக் கல்யாணம் கூடினா... இவளை நம்ம பொண்ணா நினைச்சி இவளுக்கு வேண்டியதைச் செய்யலாங்க...“ என்றாள் குரல் தழுதழுக்க.
    அவள் பேச்சைக் கேட்டு சற்று நேரம் அசையாமல் நின்றிருந்த சுரேந்தர், தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான். அவளுக்கு இருந்த இந்த மனம் நமக்கில்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டு, “சரிமா... கவலைப்படாதே. நீ சொன்னது போலவே செஞ்சிடலாம்“ என்றான்.
    இப்பொழுது இருவருக்கும் மனம் இலேசாகியது.

அருணா செல்வம்.
29.07.2013

(நட்புறவுகளே.... கதையைக் கடகடவென்று ஒரு நிமிடத்திற்குள் வாசித்து விடுங்கள். இதை விட இக்கதையை என்னால் சுறுக்க முடியவில்லை. அதனால் தான். ஹி ஹி ஹி..)
    

வியாழன், 25 ஜூலை, 2013

இதுவும் கடந்து போகும்!!



நிலையாய் இருக்கும் என்றேநாம்
   நெடிய வாழ்வை எண்ணுகிறோம்!
வலையைப் போட்டே இழுக்கின்றான்!
   வகையாய் மாட்டி விடுகின்றோம்!
அலையாய் இன்பம் அடித்திருக்க
   அமைதி யான வாழ்க்கையினைக்
கலைத்துப் போட்ட கோலத்தைக்
    கவலை பொங்க சொல்லிவிட்டாள்! 

காதல் கொண்ட வாழ்வினிலே
   கணவன் என்றும் தெய்வம்தான்!
சேதம் இல்லா வாழ்வினிலே
   சேர்ந்த துன்பம் என்சொல்வேன்?
சாதல் கூட சிலநாளில்
   சகித்து வாழப் பழகிடலாம்!
பூத உடம்பில் உயிரிருந்தும்
   பொல்லா நிலையை என்சொல்வேன்?

அந்த செய்தி நானென்றும்
   அறியா மலேயே இருந்திருந்தால்
சொந்தம் கண்ட அனாதைபோல்
   சுடரும் முகமாய் இருந்திருப்பேன்!
வந்த செய்தி இதயத்தை
   வலிக்கச் செய்து விட்டதினால்
சிந்தை முழுதும் உன்நினைவாய்
   சின்னத் தனமாய் அழுகின்றேன்!

என்ன சொல்வேன் ஆறுதலாய்?
   எதைத்தான் சொன்னால் ஆறிவிடும்?
இன்ன வார்த்தை என்றிருந்தால்
   இதயம் ஏந்தி சொல்லிடுவேன்!
துன்பம் துடைக்க வார்த்தையில்லை!
   துணிவாய் நீயே சொன்னஉரை!
என்றும் மனத்தில் வைத்துவிடு!
   இதுவும் கடந்து போகுமன்றே!

(கவலை கொண்ட தோழிக்குச் சமர்பணம்.)
அருணா செல்வம்.
26.07.2013