வெள்ளி, 28 செப்டம்பர், 2012

பெண்களுக்கு “முக்காடு“ அவசியமாகிறது..!! (தகவல்)




வணக்கம் நட்புறவுகளே.

     இன்றைய காலத்தில் முஸ்லிம் அல்லாத பெண்களும் முக்காடு போட வேண்டிய அவசியம் வந்துள்ளதையும் கொஞ்ச காலமாக வேறு வழியில்லாமல் முக்காடு போட்டுக்கொண்டு பெண்கள் வெளி வேலைக்குச் செல்வதையும் இங்கே காண நேர்ந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன்.

    இந்தியாவில் முக்கியமாக தென் திசை பெண்களுக்கு அழகிய கூந்தல் இருப்பது அனைவரும் நாம் அறிந்ததே.
    கோவில்களில் முக்கியமாக திருப்பதி கொவிலில் முடி காணிக்கையாலே இந்தியாவில் அதிக வருமானம் கிடைக்கிறது.
     இந்த ஆண்டு முதன்முறையாக இணையத்தின் மூலம் 150 டன் முடி ஏலம் விடப்பட்டு முதன் முறையாக 133 கோடி கிடைத்தது.
     இந்த முடியை அமெரிக்கா, சீனா, ஆப்பிரிக்காவில் நைஜிரியா போன்ற முக்கிய நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று ஏலம் எடுத்து வாங்குகிறது. நம் பெண்களின் அழகிய முடிக்கு அவ்வளவு கிராக்கி!!
     இதெல்லாம் பழைய கதைதான்.!!

   ஆனால் இப்பொழுது நடக்கும் கதை தான் கவலைக்குரியதாக இருக்கிறது. இங்கே பிரான்சில் பெண்களின் தாலி சரடைப் பிடுங்குவதால் பெண்கள் கொஞ்ச காலமாக மஞ்சள் கயிற்றில் வெறும் தாலியை மட்டும் இணைத்து அணிந்து கொண்டு வெளியிடங்களுக்கச் சென்றார்கள்.
    இந்த மஞ்சள் கயிற்றில் இருக்கும் மாங்கல்யத்தில் இருக்கும் சிறு தங்கத்திற்காக அந்தக் கயிற்றையும் அறுத்தார்கள் திருடர்கள்.. அதனால் பயமடைந்த நிறைய பெண்கள் தாலி சரடோ, மஞ்சள் கயிறோ கழுத்தில் அணியாமல் அந்த மஞ்சள் கயிற்றைக் கையில் நோம்பு கயிறு போல் கட்டிக் கொள்கிறார்கள். (இங்கே பெரியார் வந்தெல்லாம் பகுத்தறிவை ஊட்டவில்லை. வெறும் கள்ளர் பயத்தால்...)
    இதுவாவது பரவாயில்லை என்று தான் நினைத்தோம்.
    இப்பொழுது நடப்பது என்னவென்றால் அழகிய கூந்தல் உள்ள பெண்களின் கூந்தலை பஸ்ஸிலோ.. மெத்ரோவிலோ... அல்லது நடந்து போகும் போதோ அவர்களுக்குத் தெரியாமலோ அல்லது மிரட்டியோ வெட்டிக் செல்கிறார்கள்.
   இது இங்கே புதியதாகத் துவங்கியிருக்கும் திருட்டு!!!
   அதற்காகவே கடந்த ஒரு மாதமாக வெளிவேலைக்குச் செல்லும் கூந்தலுடையப் பெண்கள் முக்காடிட்டுச் செல்கிறார்கள்.
என்ன கொடுமை இது. எப்பொழுது இந்த வழக்கம் மாறும் என்றும் தெரியவில்லை.

நன்றி.


அருணாசெல்வம்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

நன்றி உணர்வு !! (கவிதை)





தேவையான நேரத்தில் தானே வந்து
   தேடியதைத் தந்திடுவார் கடவுள் போல!
சேவையாக அவருக்குத் திருப்பி நாமோ
   சேர்த்துவைத்த பொருள்தந்தும் பயனே இல்லை!
தேவையென்று நாம்நினைத்த பொருளை விட்டுத்
   தேடிவந்து கொடுத்தவரை நெஞ்சில் நிறுத்தத்
தீவைத்துக் கொளுத்தினாலும் மறைந்து போகாத்
   தீவிரமாய்ப் பற்றிவரும் உணர்வே நன்றி!


அருணா செல்வம்.
  

திங்கள், 24 செப்டம்பர், 2012

எங்கே நன்றி..? (கவிதை)




 நன்றியெனும் சொல்லுக்குப் பொருள்தான் என்ன?
   நாம்வாழ வேண்டுமெனில் நாளும் செய்வார்!
பன்றியெனும் விலங்குக்குக் கீழாய்த் தாழ்ந்து
   பாவமெனும் சேற்றினிலே முழுகி நிற்பார்!
குன்றிமனம் வாடுகின்ற காலம் வாய்க்க,
   கொணர்ந்திட்ட பெரும்சுமையைப் பிரித்துப் பார்க்க,
ஒன்றிமுனம் தெளிந்தவர்க்குத் தெரியும் அன்றே!
   ஓய்வின்றி ஓடுகிறோம்! எங்கே நன்றி?


அருணா செல்வம்.

சனி, 22 செப்டம்பர், 2012

முடியுமா...? (கவிதை)




 மடையைத் திறந்திட ஓடிடும் வெள்ளமா?
    மனிதரின் உள்ளங்கள்!
தடையை விதித்ததும் தடுத்திட முடியுமா?
    கற்பனை இன்பங்கள்!
கடையில் கிடைப்பதா காதலும் கவிதையும்?
    கண்டதும் விலைகேட்க!
விடையில் மனத்தினைத் தேடிட முடியுமா?
    விரும்பிடும் எண்ணங்கள்!


அருணா செல்வம்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஆறு பிள்ளை பெற்றாலும்... (கவிதை)




 மலரினும் மெல்லியது - 3

ஆறு பிள்ளை பெற்றாலும்
   அடியோ உதையோ வாங்கினாலும்
நூறு வயது வாழவேண்டி
    நோன்பு இருப்பாள் அவனுக்கே!
தீரும் இளமை உணர்வெல்லாம்
   தீர்ந்த பிறகும் உடனிருப்பாள்!
மாறும் உலகில் மங்கையரின்
   மாறா மனத்தில் காமமெங்கே?

நோயின் மருந்து நோயிடமே
   நூலில் உள்ள கருத்தைப்போல்
பாயில் படுத்தே கிடந்தாலும்
   பாசம் பொழிந்து காத்திடுவாள்!
தாயின் அன்பைத் தலைவனுக்குத்
   தானே கொடுத்து மகிழ்ந்திடுவாள்!
சேயின் தவற்றை மன்னிக்கும்
   செயலில் அவளே தாயாவாள்!

கல்வி பலவும் கற்றாலும்
   கணவன் காலே கதியென்றே
எல்லை இல்லா அன்புடனே
   இருக்கும் அவளைக் கணைபோன்ற
சொல்லால் சுட்டால் அவளமனது
   சுருங்கி வாடிப் போய்விடுமே!
கல்லாய் இல்லை பெண்ணுள்ளம்
   கசங்கக் கண்ணீர் வடித்துவிடும்.

உலவும் அழகு மாந்தரெல்லாம்
   உரிமை கொண்ட ஆண்களிடம்
களவு, காதல், காமத்துடன்
   கள்ளம் இல்லாக் கற்புடனே
குலவிக் கூடிக் கொடுத்தாலும்
   கொண்ட மனமோ கள்வடியும்
மலரை விடவும் மெல்லியது
   மங்கை கொண்ட மென்மனதே!

அருணா செல்வம்.

மலரினும் மெல்லியது காமம் சிலர்அதன்
செல்வி தலைப்படு வார்.   (குறள் – 1289)

(சுவிஸ் கவியரங்கத்தில் வாசித்தக் கவிதை முடிவு!)