செவ்வாய், 31 ஜூலை, 2012

அன்பே அனைத்தும் !! (கவிதை - 2)



துன்பம் என்று வந்தாலும்
    துணிந்து நகர்த்தி வைத்துவிட்டு
இன்பம் மட்டும் இருப்பதைப்போல்
    இயன்ற அளவு நடித்திடலாம்!
அன்பால் அரும்பும் கண்ணீரை
    அடக்கி விடவும் முடிந்திடுமா?
அன்பின் எல்லை இதுவன்றோ!
    அகிலம் இதற்கு தூசியன்றோ!

இனத்தை இணைக்கும் அன்பற்றோர்
    இருக்கும் அனைத்துப் பொருளினையும்
தனக்கே என்றே வைத்திடுவார்!
    தன்னுள் அன்பை வைத்தவரோ
தனக்கே உரிய எலும்பினையும்
    தஞ்சம் என்று வந்தவர்க்கு
உனக்கே என்று கொடுத்திடுவார்!
    உலகில் அவர்தாம் உயர்ந்தவரே!

பார மான வாழ்க்கையென்று
    பாச மற்றோர் நினைப்பாரே!
ஈரம் நெஞ்சில் காய்ந்நிருக்க
    இன்பம் அங்கே விளைந்திடுமா?
ஓரம் ஒடுங்கும் கோழையரும்
    ஒருவர் மேலே அன்புவைத்தால்
வீர தீர செயல்செய்து
    வியக்கும் வெற்றி பெறுவாரே!


(அன்பு தொடரும்)

திங்கள், 30 ஜூலை, 2012

அன்பே அனைத்தும் !! (கவிதை - 1)




கூடிப் பிறந்தோம்! அன்னைநம்மை
    கொஞ்ச மகிழ்ந்தோம்! கல்வியினை
நாடிப் பெற்றோம்! நன்மையென
    நாலும் கற்றோம்! செல்வத்தைத்
தேடி அலைந்தோம்! கிடைத்தவுடன்
    தீமை அஞ்சோம்! தெளிவின்றி
ஆடி அடங்கும் வாழ்க்கைநாம்
    அறிந்து வைத்த செய்தியென்ன?

அன்பு என்ற அமிர்தத்தை
    அன்னை ஊட்ட அறிகின்றோம்!
அன்பை அறியும் முன்னாலே
    அதனுள் மூழ்கிப் போகின்றோம்!
தன்னுள் புகுந்த உயிரிடத்தில்
    தானும் கலந்து தங்குவதால்
மின்னும் இந்தப் பூமியிலே
    மீளாச் சிறைதான் அன்பன்றோ!

அன்பு.. அறிவில் இருந்துவிட்டால்
    ஆன்ம சக்தி கிடைத்துவிடும்!
அன்பு மனத்தில் இருந்துவிட்டால்
    ஆழ்ந்த கருணை பிறந்துவிடும்!
அன்பு.. உணர்வில் இருந்துவிட்டால்
    ஆசை காதல் பிறந்துவிடும்!
அன்பு செயலில் இருந்துவிட்டால்
    அகிம்சை ஞானம் பிறந்துவிடும்!


(அன்பு தொடர்ந்து வரும்)

சனி, 28 ஜூலை, 2012

அப்பப்பா....!!! (கவிதை)




அப்பப்பா! என்னகத்தை
   ஆட்கொண்ட பேரழகே!
ஒப்பப்பா என்றெழுத
   எவ்வுலகும் ஈடில்லை!
உப்பப்பா உணவிற்கே!
   உணர்வப்பா உயிருக்கே!
செப்பப்பா செந்தமிழை!
   சிந்தையுளம் குளிர்ந்திடவே!

தப்புகின்ற சொல்லெல்லாம்
   தயவேண்டி எனைக்கெஞ்சி
ஒப்புகின்ற உவமையிலே
   ஒப்பிடவே கேட்டுவரும்!
செப்புகின்ற பாட்டெல்லாம்
   செந்தமிழின் செல்வமடி!
உப்பிடுதே மனமெல்லாம்
   ஊர்வசியே உன்நினைவால்!!


  

வியாழன், 26 ஜூலை, 2012

காதலுக்கு ஒரு கடிதம்!! (சிறுகதை)




   



(2006 – ல் ராணியில் வெளிவந்த எனது சிறுகதை இது)

புதன், 25 ஜூலை, 2012

நீ... வேண்டும்!! (கவிதை)





நிலவாக என்மனத்தில்
நீந்துகிற நேரிழையே!
வலமாக என்மனத்தில்
வாழுகிற வண்டமிழே!
பலமாக என்மனத்தில்
பற்றுகிற பேரழகே!
களமாக என்மனத்தில்
கவிகொழிக்க நீ...வேண்டும்!!

கண்ணுக்குள் மணியாக!
கருத்துக்குள் ஒளியாக!
பண்ணுக்குள் அணியாக!
பண்புக்குள் நிலையாக!
விண்ணுக்குள் இருக்கின்ற
வியன்சொக்க நிலமாக!
பொன்னொக்கும் பெண்ணழகே!
கவிபுனைய நீ...வேண்டும்!!


திங்கள், 23 ஜூலை, 2012

காதல்...!!! (கவிதை – 3)





காதல் பிடிக்கா தென்பவரும்
   காதல் கவிதை ரசித்திடுவார்!
காதல் உண்மை என்பவரும்
   காதைத் தீட்டிக் கவிகேட்பார்!
காதல் பொய்யே என்பவரும்
   கவிதை அழகில் மயங்கிடுவார்!
காதல் காமம் என்பதெல்லாம்
   காலம் கொடுத்த வரமன்றோ!!

நடக்கும் வாழ்க்கைச் சூழலிலே
   நாளும் காதல் இல்லையென்றால்
உடம்பு மட்டும் இங்கிருக்கும்
   உணர்வோ இன்றி உலவிவரும்!
திடமாய் மனதும் இருந்தாலும்
   தேவை எதையும் நினையாமல்
இடமாய்ப் பார்த்தே அமர்ந்துகொண்டு
   இறப்பை எண்ணிக் காத்திருக்கும்!

ஓடி ஓடி உழைக்கின்றோம்!
   உயர்வைத் தேடி அலைகின்றோம்!
தேடித் தேடிப் பொருள்குவித்தும்
   தேடு கின்றோம் நிம்மதியை!
நாடி நலிந்து போனபின்பே
   நடந்த தெல்லாம் எண்ணஎண்ண
கூடி மகிழாக் காதலின்றேல்
   கொண்ட வாழ்க்கை வீண்அன்றோ!!


ஞாயிறு, 22 ஜூலை, 2012

காதல்...!!! (கவிதை -2)





உண்மைக் காதல் வந்துவிட்டால்
   உடனே சிறகும் முளைத்துவிடும்!
எண்ணம் எல்லாம் அதைநினைத்து
   ஏங்கி ஏங்கி மனம்மகிழும்!
உண்ணும் உணவும் மறந்துவிடும்!
   உறக்கம் எங்கோ தொலைந்துவிடும்!
கண்கள் திறந்தே இருந்தாலும்
   கனவாம் உலகில் மிதக்கவிடும்!

பத்துப் பொருத்தம் பார்க்காது!
   படிப்பைக் கூட நினைக்காது!
சொத்துச் சுகத்தை ஏற்காது!
   சோசி யத்தை மதிக்காது!
கத்தும் சாதி பேதத்தைக்
   காதில் போட்டுக் கொள்ளாது!
யுத்தம் வீட்டில் நடந்தாலும்
   உறுதி யாக கைபிடிக்கம்!

எதுதான் காதல் என்றேநாம்
   எடுத்துச் சொல்ல முன்வந்தால்
இதுதான் காதல் என்றுசொல்லி
   இனிமை சேர்க்க முடியவில்லை!
மதுவோ குடித்தால் மனம்மகிழும்!
   இதுவோ நினைத்தால் மனம்சுழலும்!
எதுவோ இதிலே இருக்கிறது!
   இதனால் உலகம் சுழல்கிறது!!


(காதல் தொடரும்)