ஞாயிறு, 24 ஜூன், 2012

பாப்பா பாட்டு!!





சிட்டுக் குருவி
   சிறகை விரித்துச்
      சீராய் வந்துவிடு!
பட்டுப் பாப்பா
   பல்லைக் காட்ட
     பாக்கள் பாடிவிடு!
கட்டும் பாட்டில்
   கன்னல் தமிழைக்
     கருத்தாய்ச் சேர்த்துவிடு!       
சொட்டுத் தேனாய்ச்
   சொற்கள் இனிக்கச்
      சொக்க வைத்துவிடு!

வட்ட நிலவின்
   வண்ணக் கதையை
      வகையாய்ச் சொல்லிவிடு!
பட்டுப் புழுவின்
   பண்பு வாழ்வைப்
      பாட்டில் கலந்துவிடு1
எட்டுத் திக்கும்
   ஏற்கும் தமிழை
      என்றும் நீகலந்தால்
மெட்டு போட்டே
   மேலும் பாப்பா
      மேன்மை கவிபடைப்பாள்! 


வெள்ளி, 22 ஜூன், 2012

யாரோ அமைத்தப் பாதை!! (சிறுகதை)


‘பாட்டி… பாட்டி .. எழுந்திருங்க…”
    குமார் செல்லம் பாட்டியை உலுக்கி எழுப்பினான். சட்டென்று விழிப்பு வந்த பாட்டி ‘என்னப்பா குமாரு..” எழாமலேயேக் கேட்டாள்.
    ‘பாட்டி எனக்கும் பாரதிக்கும் ஒரு சந்தேகம். நீதான் தீர்த்து வைக்கனும்.. எழுந்து உட்காருங்க..” அவள் கையைப் பிடித்து தூக்கி அமரச்செய்தான்.
   ‘என்னடா கண்ணு சந்தேகம் ஒனக்கு…?”
   ‘பாட்டி ஆத்தீகம் என்றால் என்ன? நாத்தீகம் என்றால் என்ன?’
    அவன் கேட்டக் கேள்விக்குச் செல்லம் பாட்டி நிமிர்ந்து உட்கார்ந்தாள். இப்படி ஒரு சந்தேகம் நம் பேரக் குழந்தை களுக்கா..?
    ‘சொல்லு பாட்டி….” உலுக்கினான்.
    ‘ஆத்தீகம் நாத்தீகம் ரெண்டும் ஒன்னு தான்பா..” கொட்டாவி விட்டபடிச் சொன்னாள்.
    பாட்டியின் பதில் புரியாமல் இருவரும் அவளை அதிசயமாகப் பார்த்தார்கள்.
    ‘இல்ல பாட்டி…”

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கில மேனியும்
மூசு வண்டரை பொய்கையும் போன்றதே
இசன் உன்தன் இணையடி நிழலே!

   ‘இப்படின்னு திருநாவுக்கரசர் பாடிய பாட்டைத் தானே பாடியதாக நினைத்துக்கொண்டு கடவுளுக்குப் பூசை செய்கிறவர்கள் ஆத்தீகவாதி…
   கடவுள் என்று எதுவுமில்லை. மதம் சாதி சமயம் எல்லாம் மனிதனால் ஏற்படுத்தப் பட்டது என்று சொல்பவர்கள் நாத்தீகவாதிகள்.
   நீங்க ரெண்டு பேருமே ஒன்றுதான் என்று சொல்கிறீர்களே.. எங்களுக்கு விளங்கவில்லை. விளக்கமாகச் சொல்லுங்கள் பாட்டீ…” பாரதி கொஞ்சளாகக் கேட்டாள்.
   ‘பாரதி.. நாத்தீகம் என்பது உலகில் நடந்ததை நடப்பதைப் பகுத்து ஆராய்வது. நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டிருந்த போது சுதந்திர உணர்ச்சியை ஊட்டி கவி படைத்தார் பாரதியார். நாடு சுதந்திரம் பெற்றப் பிறகும் நாட்டிலுள்ள பெண்களின் விடுதலைக்காகவும் பெண்ணடிமைத் தன ஒழிப்பிற்காகவும் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அது மட்டும் அல்லாமல் சாதி மதம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு சிலர் தங்களின் உயர்வுக்காக வகுத்துக் கொண்ட வழி என்றும் சாடினார். முக்கியமாகப் பார்ப்பனியத் தனத்தை எதிர்த்தார். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் தூங்கிக் கொண்டிருந்த மக்களின் ஆறாவது அறிவைத் தட்டி எழுப்பினார். இவருடையக் கொள்கைகளைத் தாங்கியது தான் திராவிடக் கழகம்!
   இவர் கொள்கைகளை ஏந்தியவர்களை நாத்தீகர் என்று சொல்கிறார்கள்.”
   ‘அப்போ ஆத்தீகர்கள் என்றால்…?”
   “தம் முன்னோர்கள் நடந்து வந்த சாதி சமயம் என்ற பாதையைத் தாங்களும் விடாமல் அதிலே தொடர்ந்து பயணம் செய்பவர்களை ஆத்தீகர் என்று சொல்கிறோம்;.”
   “அப்போ ரெண்டும் ஒன்னு கிடையாதே பாட்டீ…’



   ‘நல்லா யோசிச்சிப் பாரு. ரெண்டும் ஒன்னுதான்னு புரியும்.
ஆத்தீகரோ நாத்தீகரோ.. இவர்களாகப் புதியதாக எதையும் சொல்லவில்லை. இந்துக்களோ கிருஸ்துவரோ முஸ்லீம்களோ அல்லது பௌத்தமோ எல்லா மதத்தினரும் எங்கள் மதம் இப்படி சொல்கிறது. இராமானூஜர் இப்படி சொன்னார். ஆதி சங்கரர் இப்படி சொன்னார் என்று இந்துக்களும் ஏசுகிறிஸ்து சொன்னார் அப்போஸ்தலர் சொன்னார் என்று கிருஸ்துவர்களும் முகமதுநபி சொன்னார் என்று முஸ்லீம்களும் புத்தர் வாக்கு என்று பௌத்தர்களும் சொல்லிக் கொண்டு தன் மதத்தை வளர்க்கிறார்கள். ஆனால் அவர்களாக ஏதாவது புதியதாக சொன்னார்களா..?
   நாத்தீகரோ.. புரட்சி கவிஞர் பாரதி தாசன் தந்தைபெரியார் அம்பேத்கார் சொன்னதையேப் பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களும் எதையும் புதியதாகச் சொல்ல வில்லை. இப்பொழுதுப் புரிகிறதா..? நான் ஏன் இரண்டும் ஒன்றென்றுச் சொன்னது….”
   ‘இல்ல பாட்டீ.. நீங்க தப்பா சொல்லுறீங்க. பெரியார் பாரதிதாசன் சொல்லுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறது. இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறது. ஆனால் மதத்திற்கு அப்படி எதுவும் இல்லையே!’
   ‘குமாரு… பெரியார் காலத்தில் நாடு சுதந்திரம் இன்றி இருந்தது. பெண் அடிமைப் பட்டிருந்தாள். அதைச் சுட்டிக்காட்டி அவ்வடிமைத் தனத்தை நீக்கியவரை மக்கள் மதிக்கிறார்கள்.
   ஆனால் பழங்காலத்தில் பெண் அடிமையாய் இல்லை. நாடும் அன்னியருக்கு அடிமையாய் இல்லை. மக்களுடைய ஏதோ ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தான் மதம் என்பது தோன்றி இருக்கும். ஆனால் எந்த காலத்தில் தோன்றியது என்று தெரியாது. ஆனால் அந்த சமயத்தை மக்கள் அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தான் வேதனை!
   ஆகமொத்தத்தில் நத்தீகமோ ஆத்தீகமோ மக்களின் தேவைக்காகத் தான் தோன்றியது என்று புரிந்து கொண்டாலே அவை இரண்டும் ஒன்றே என்பதும் புரிந்துவிடும்.’
   ‘அப்போ கடவுள் நம்பிக்கை என்பது பொய்யா…?”
    பாவமாகக் கேட்ட பாரதியிடம் சொன்னாள்.. ‘நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நினைத்தே ஆத்தீகர்கள் அதற்கோர் வடிவம் கொடுத்து கற்பூரம் ஊதுவத்தி மெழுகுவத்தி என்று தீபங்களைக் காட்டி வழிபடுகிறார்கள். நாத்தீகர்களும் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தங்கள் மறியாதையைச் செலுத்துகிறார்கள். இருவருக்குமே ஒவ்வோர் வழிகாட்டி இருக்கிறது. அவர்கள் காட்டிய வழியில் பயணம் செல்கிறார்கள்.
   இப்பொழுது புரியுதா…? நான் ஏன் ரெண்டும் ஒன்னுதான்னு சொன்னது. இதை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கடினம் தான். ஆனால் நன்றாக சிந்தித்தால் உங்களுக்கே நன்றாகப் புரியும். போய் ரெண்டு பேரும் சண்டைப் போடாமல் விளையாடுங்கள்.”
   அவர்களை அனுப்பி விட்டு செல்லம் பாட்டி உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

       

கற்பனை!! (கவிதை)




 கற்பனைக் குதிரைக்(கு)
    எத்தனை கால்கள்
       எண்ணிக் காட்டுங்கள்!
சொற்களில் வடிக்க
    எத்தனை நிறங்கள்?
        சுவையாய்த் தீட்டுங்கள்!
கற்பனை எல்லாம்
    கருநிறக் கண்ணன்
        வேலை என்பதனால்
சொற்களில் வைத்து
    விளையாடும் கவியும்
       காதல் கண்ணன்தான்!


வியாழன், 21 ஜூன், 2012

பருவ வயது!! (கவிதை)





பருவ வயதிலே
    பாவையின் நெஞ்சமோ
       பறந்திடும் காற்றாடி!
உருவ வடிவிலே
    காளையர் மனத்தினை
       உடைத்திடும் கண்ணாடி!
அரும்பு மனத்திலே
    ஆசையும் வளருதே
       அதிசயம் என்னாடி?
கரும்புக் கணையிலே
    காமனும் துரத்தவே
       காதலின் வண்ணமடி!!

 
(இப்பொழுது....
கவிமனத்தில் “போகப் போகத் தெரியும்”  தொடர்கதை பாகம் - 14)


செவ்வாய், 19 ஜூன், 2012

குழந்தையின் சிரிப்பு!! (கவிதை)





சத்தம் கேட்டே ஓடிவந்தேன்
    சதங்கை அறுந்து சிதறியதோ!
நித்தம் உனக்கே இதேவேலை!
    நினைத்தால் கோபம் வந்துவிடும்!
பித்தம் பிடிக்கக் கைஓங்கிப்
    பின்னே உணர்ந்தேன்! சத்தமெலாம்
சித்தம் குளிரும் உன்சிரிப்பே!
    சிந்தை குளிர வைத்ததடி!!




திங்கள், 18 ஜூன், 2012

தெளிவு!! (சிறு...கதை)



   மாலை மஞ்சளில் சூரியன் மயங்கும் வேலை... மன்மத அம்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு பாச பிணைப்பை இச்சென்மத்தில் மாற்றவே முடியாத தங்கையின் வீட்டிற்குச் சென்றேன்.
    தாவிக்குதித்து ஓடிவந்தாள் கால் முளைத்தத் தாமரையாய்த் தங்கையின் மகள்.
    ஆசையுடன் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்.
  இரண்டு மாதம் இந்தியாவில் தான் கண்டதையெல்லாம் கண்விரித்துக் கூறினாள்.
  கடைசியில் கேட்டாள்.. நீங்கள் கவிதையெல்லாம் எழுதுவீங்களே... நான் கேட்பதற்கு பதில் சொல்லுவீங்களா...?என்று
  எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான்... நமக்கு எதுவும் முழுமையாகத் தெரியாதே... ஏடாகூடமாக ஏதாவது கேட்டுவிட்டால்....
   இருந்தாலும் இதை ஐந்துவயது குழந்தையிடம் ஒப்புக்கொள்ள முடியாது என்று மனம் மறுத்ததால்... சரி கேளும்மா... பதில் தெரிந்தால் சொல்கிறேன் என்றேன்.

இவளும் கேட்டாள்
    “இந்தியாவில் சுவர் இருக்குது இல்லையா.... அதுல எறும்பு வரிசை வரிசையாக போகும் பார்த்திருக்கிறீர்களா...?“ என்றாள்.
     இந்தியாவில் பிறந்துவிட்டு இதைப் பார்க்காமலா... ஆமாம் போகும். அதற்கென்ன..?“ என்றேன்.
    அப்படி வரிசையாக போகும் பொழுது இடையில் நம் கை விரலால் ஒரு கோடு போட்டால் அந்த எறும்புகள் தடுமாறுதே... ஏன் தெரியுமா....?“ என்றாள்.
   அடடா... அருமையாக குழந்தை யோசிக்கிறதேன்னு நினைத்து மனத்திற்குள் பெருமிதத்தோடு சொன்னேன். “எறும்புக்குக் கண்ணு தெரியாது. அது வாசனை முகரும் உணர்ச்சியைக் கொண்டு தன் இனத்தோடு ஒன்றாக சேர்ந்து செல்வதற்காகத் தான் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்கிறது. அப்படிச் செல்லும் பொழுது நீ உன் கைவிரலால் அங்கே கோடு போட்டால் உன் கைவிரல் வாசனை அங்கே ஒட்டிக்கொள்ளும். அந்த வாசனை அதற்கு புதிது என்பதால் வழி புரியாமல் தடுமாறும்.“ என்றேன்.
     அவளும் சற்று நேரம் யோசித்தாள். பிறகு சொன்னாள்... ஐயோ நீங்க புரியாமல் சொல்லுறீங்க... எறும்புக்குச் சின்ன இடை. அந்த இடையில உங்க கைவிரலால கோடு போடவே முடியாதே....என்று சொல்லிச் சிரித்தாள்.
  நானும் என் அறியாமையை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். நாம், எனது, என்எண்ணம் என்பதை மட்டும் நினைத்திருந்தால் அடுத்தவரின் எண்ண உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாது.
      உதாரணமாக..
       இப்பொழுதெல்லாம் எழுத்தாளர்கள் கவிஞர்கள் புதுப்புதுக் கற்பனைகளுடன் அருமையாக எழுதுகிறார்கள். அவர்கள் எழுதியதை நாம் ஒன்று நினைத்தால் அவர்கள் வேறு எண்ணதில் எழுதியதாகச் சொல்கிறார்கள். அது தான் உண்மை. நாம் நினைத்தது பிரம்மையாக இருந்தாலும் அவர்கள் சொன்னது பிரமாண்டமாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.
    அது இது, அவள் இவள் என்றெல்லாம் எழுதினாலும் நமக்கு “எது எவள் என்பது முதலில் புரியவில்லை. என்றாலும் இப்பொழுது நன்றாகப் புரிந்து போனது.
    அவர்கள் முதுகவிஞர்கள் என்பதும்,
    நாம் புது(சிறு) கவிஞர் என்பதும்! நன்றி.
 

 இப்பொழுது...
கவிமனத்தில் ”போகப் போகத் தெரியும்” பாகம் - 13


ஞாயிறு, 17 ஜூன், 2012

மழலை மொழி!! (கவிதை)




சின்னப் பூபோல்
   சிரிக்கும் வாயால்
      சிந்தும் மழலைமொழி!
கன்னித் தமிழைக்
   கன்னல் தேனில்
      குழைத்த கவிதையடி!
உன்னில் இருந்து
   உலகை மறந்து
      உதிரும் சிரிப்பொலியோ
பொன்னை உருக்கிப்
   பூவில் நனைத்துப்
      பொழியும் இன்பமடி!


(இப்பொழுது...
கவிமனத்தில் ”போகப் போகத் தெரியும்” பாகம் 13)

வியாழன், 14 ஜூன், 2012

கவிஞனின் சுதந்திரம்!! (கவிதை)




திட்டு தேவியே! சிந்தை பதிந்திட
     தேளென வந்தேநீ!
கொட்டு தாங்குவேன்! கோபமா என்னுடன்
     குளிர்தமிழ் நற்பாவாய்!
வெட்டும் கண்களை வெல்லுதல் எளிதில
     வேண்டியே நிற்கின்றேன்!
கட்டுத் தாண்டுதல் கவிஞனின் சுதந்திரம்
     காரிகை கண்பாராய்!

பொன்னாய் மின்னிடும் பழந்தமிழ்ச் சொற்களைப்
     பொறுக்கிடும் புலவன்நான்!
கண்ணாய் எண்ணியே கன்னியாம் தமிழினைக்
     காத்திடும் கவிஞன்தான்!
சொன்னாய் வார்த்தையில் செந்தமிழ்ச் சொல்லினைச்
     சுடச்சுட தந்தவள்நீ!
பண்ணாய்ப் பாடிடும் பாவலன் எண்ணத்தைப்
     பாடிடும் பாக்களில்பார்!




புதன், 13 ஜூன், 2012

பொறுக்கிப் புலவன் !! (கவிதை)





 திட்டித் திட்டி வாய்நோக
    தீராக் கோபம் மூண்டெழவே
எட்டிக் காய்போல் சிலகவிதை
    இருக்கக் கண்டு வெறுத்ததனால்
கொட்டும் தேனீ போன்றென்னைக்
    திட்டி விட்டாய் பொறுக்கியென!
பட்டுப் பெண்ணே! உன்சொல்லைப்
    பாவால் நெய்தேன்! படித்துப்பார்!


நறுக்கி நறுக்கிச் சமைத்திடவே
    நங்கை பொறுக்கும் காய்கறிபோல்,
முறுக்கி முறுக்கிக் கயிறாக்க
    முதலில் பொறுக்கும் பஞ்சினைப்போல்
பொறுக்கிப் பொறுக்கிச் சொற்களைநான்
    பூவாய்த் தொடுத்தேன் கவிமாலை!
“பொறுக்கிப் புலவன்“ எனச்சொன்னாய்!
    பொருந்தும் சொல்தான்! தவறிலையே!



திங்கள், 11 ஜூன், 2012

சொர்க்கம் கண்முன் மின்னுதடி!! (கவிதை)



எண்ணி எண்ணி மனம்வாட,
     எங்கே கவிதை நான்பாட,
மின்னி மின்னி வான்தூர,
     பின்னிப் பார்க்க நினைவூற,
கன்னி உன்றன் கண்ணழகு
     கசங்கி உயிரைப் பிழியுதடி!
பொன்னி நதியே!  பூந்தமிழே!
     பொலியும் இன்பப் பொற்சிலையே!

முள்ளில் பூத்த ரோசாவே!
     மூச்சுக் காற்று தொடும்போதே
எல்லை இல்லா இன்பத்தை
     என்றன் இதயம் ஏற்றதுவே!
முல்லைக் காடே! முழுமதியே!
     முத்துச் சரமே! முத்தமிழே!
பிள்ளை மொழிபோல் உன்குரலோ
     பித்தாய் நெஞ்சைக் கவ்வுதடி!

காற்றில் கமழும் நறுமணமோ
     காதல் உணர்வை ஊட்டுதடி!
ஆற்றின் ஓரம் குருவியெல்லாம்
     அழகாய்க் கூடி மகிழுதடி!
ஊற்றின் குதிப்பாய் உன்நினைவும்
     உள்ளம் முழுதும் பொங்குதடி!
நாற்றின் பக்கம் இருநண்டு
     நன்றே காதல் நடத்துதடி!

வாடி என்றன் அருகினிலே
     கூடி இன்பம் படைத்திடுவோம்!
கோடி கோடிப் பிறவிகளில்
     கொள்ளும் இனிமை அடைந்திடவோம்!
ஆடிப் பாடிக் களித்திடுவோம்!
     அமுதக் கடலில் குளித்திடுவோம்!
சோடிக் கிளிகள் கொஞ்சுதடி
     சொர்க்கம் கண்முன் மின்னுதடி!