மீன்விழிப் பார்வை
என்னை
மின்னலாய் வெட்டித் தாக்க
தேன்மொழி வார்த்தை
என்னைத்
தென்றலாய் வருடிச் செல்ல
மான்நடை நடந்த மேனி
மனத்தினைக் குடைந்து தள்ள
வான்வழி நான்ப
றந்தேன்
வஞ்சியைக் கண்ட போதே!
தேடிடும் மலரை வண்டு
தேவியின் கண்ணைக் கண்டு
நாடிடும் தேனை உண்ண
நயமுடன் அருகில் வந்து
மூடும் இமையைக் கண்டு
முன்னிலும் மோகம் கொண்டு
ஆடிடும் அழகாய்!
நீதான்
அழகிய மலரே என்று!!
முத்தினைக் கோர்த்த
வண்ணம்
முறையுடன் பற்கள் மின்னும்!
சத்தமாய்ச் சிரித்த
போதும்
சங்கீதம் இனிமை நல்கும்!
எத்தனை முறைதான்
கேட்டும்
ஏங்குதே என்தன் உள்ளம்!
பொத்தியே வைக்க
வேண்டும்
பொல்லாத உலகம் அன்றோ!
பாதனில் உள்ள
தெல்லாம்
பைங்கிளி உன்னி டத்தில்
பேதமின் றிருக்கக்
கண்டேன்!
பெண்ணே!உன் கண்ணின் காந்த
காதலில் கலந்த நானோ
கவிதையை எழுதிப் பார்க்க
காதலும் கவிதை
யும்தாம்
கலந்திட இன்பம் என்பேன்!!